×

காங். தலைவர் பதவிக்கு சசிதரூர், கெலாட் போட்டி; ராகுலுக்கு சோனியா திடீர் அழைப்பு: தேர்தலுக்கான அறிவிப்பு நாளை வெளியீடு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூர், அசோக் கெலாட் தயாராகி உள்ள நிலையில், ராகுல் காந்திக்கு சோனியா காந்தி அவசர அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிக்கிறார். இந்நிலையில், புதிய கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் 24ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடக்கும். தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியிடப்படும்.
இத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ராகுல் காந்தி இதுவரை தனது முடிவை வெளியிடவில்லை. அவர் மீண்டும் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டுமென பல்வேறு மாநில காங்கிரசார் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். ராகுல் போட்டியிடாத பட்சத்தில், தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் நிறுத்தப்படலாம் என ஆரம்பம் முதலே தகவல்கள் வெளியாகின.

அவருக்கு போட்டியாக, கட்சி மேலிடம் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்த ஜி-23 தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர், தலைவர் தேர்தலில் போட்டியிட சமீபத்தில் ஆர்வம் தெரிவித்தார். நேற்று முன்தினம் டெல்லியில் சோனியாவை சந்தித்து அவரின் சம்மதத்தையும் சசிதரூர் பெற்றுள்ளார். எனவே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர், கெலாட் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இவர்களைத் தவிர வேறு பலரும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் சோனியா காந்தி கட்சியின் முக்கிய தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சோனியா அழைப்பைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கேரளாவில் இருந்து நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்று சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அந்த ஆலோசனைக்கு பின், ராகுலுக்கும் சோனியா அழைப்பு விடுத்துள்ளார். இதனால், கேரளாவில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை ஒருநாள் ரத்து செய்து விட்டு ராகுல் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, ராகுல் டெல்லி செல்லவில்லை எனவும், அவர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறி உள்ளார். ஆனால் இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ராகுல் தான் முடிவெடுப்பார்
சோனியா உடனான சந்திப்புக்குப் பின் பேட்டி அளித்த கே.சி.வேணுகோபால், ‘‘யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். சசிதரூர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்படும். நிச்சயம் இது வெளிப்படையான தேர்தலாக இருக்கும். இதில் ராகுல் போட்டியிடுவாரா என்பது குறித்து அவர் மட்டுமே முடிவு செய்ய முடியும். இதுவரை அவர் எந்த பதிலையும் எங்களிடம் சொல்லவில்லை. கேரளாவில் நடை பயணத்தில் ராகுல் பிஸியாக இருப்பதால் இன்றைய ஆலோசனையில் பங்கேற்கவில்லை’’ என்றார்.

20 ஆண்டுக்கு பின்…
கடைசியாக கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடந்தது. அப்போது சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் களமிறங்கினார். அந்த தேர்தலில் 7,542 வாக்குகளில் ஜிதேந்திர பிரசாத் 94 ஓட்டு மட்டுமே பெற்றார். சோனியா அபார வெற்றி பெற்றார். தற்போது 20 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பைலட்டுக்கு முதல்வர் பதவி?
கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில், சச்சின் பைலட்டை அடுத்த ராஜஸ்தான் முதல்வராக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. நீண்ட காலமாக சச்சின் முதல்வர் பதவிக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kong ,Sasidharoor ,Gehlot ,Sonia ,Rahul , Kong. Sasidharoor, Gehlot race for chairmanship; Sonia's surprise call to Rahul: Election notification to be released tomorrow
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...