×

காங். தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் படித்தார் – ப.சிதம்பரம்

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “2024 மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையாக படித்தார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பக்கம் 30ல் இடம்பெற்றுள்ள வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை ஒன்றிய அரசு கிட்டத்தட்ட ஏற்று கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. அதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பக்கம் 11ல் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய தொழில்பயிற்சி திட்டத்தையும் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் ஏஞ்சல் வரியை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. தற்போது ஏஞ்சல் வரி முற்றிலும் ஒழிக்கப்படும் என அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்து வேறு சில அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் காப்பி அடித்திருக்கலாம். அதனை பின்னர் பட்டியலிடுகிறேன்” என புள்ளிவிவரங்களுடன் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், “நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை, சவால் வேலையில்லா திண்டாட்டம். ஆனால் அதற்கு தீர்வு காண ஒன்றிய அரசின் பதில் மிகவும் குறைவு. பணவீக்க பிரச்னையை அரசு தீவிரமாக கையாளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. குறுகியகால ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

* காங். தேர்தல் அறிக்கையின் காப்பி: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
காங்கிரஸ் பொதுசெயலாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “உயிரியல் பிறப்பல்லாத பிரதமரோ, அவர்கள் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கையிலோ வேலை வாய்ப்புகளை பற்றி குறிப்பிடவில்லை. இப்போது நிதிநிலை அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் இருந்ததை பாஜ அரசு மறைமுகமாக ஒத்து கொண்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் டிப்ளமோ, பட்டதாரி இளைஞர்களுக்கு தனியார் அல்லது பொதுத்துறை பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய பயிற்சி உரிமை சட்டம் கொண்டு வரப்படும். பயிற்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இப்போது தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதற்கு காங்கிரசின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து 5 ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி தரப்படும் என நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

* பாஜ அரசை காப்பாற்றி கொள்வதற்கான பட்ஜெட்- கார்கே
நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் டிவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
1. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவித்த பாஜ, பத்தாண்டுகள் கழித்து இளைஞர்களுக்கான குறைந்த அறிவிப்புகளை வௌியிட்டுள்ளது.
2. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, இரட்டிப்பு வருமானம் அனைத்தும் பாஜ தேர்தல் வாக்குறுதிகளின் மோசடியாக மாறி விட்டது.
3. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி, சிறுபான்மையினர், நடுத்தர வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் செயல்படுத்தப்பட்ட புரட்சிகரமான திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
4. பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான எந்த திட்ட அறிவிப்பும் இல்லை.
5. பணவீக்கத்துக்கு ஆதரவாகவும், துன்பப்படும் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி அதிகாரம் மிக்கவர்களிடம் தரும் விதமாக இருக்கிறது.
6. விவசாயம், கல்வி, சுகாதாரம், பொதுநலம் மற்றும் பழங்குடியினருக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட குறைந்த அளவு பணமே செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு புள்ளிவிவரங்களை பட்டியிலிட்டு, இந்த நிதிநிலை அறிக்கை நாட்டின் முன்னேற்றத்துக்கானது கிடையாது. மாறாக பாஜ அரசை காப்பாற்றி கொள்வதற்கான நிதிநிலை அறிக்கை” என குற்றம்சாட்டி உள்ளார்.

The post காங். தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் படித்தார் – ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Kong ,Nirmala Sitharaman ,P. Chidambaram ,Senior ,Congress ,Union Finance Minister ,Delhi ,2024 Lok Sabha elections ,Lok Sabha ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு