×

சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதை நீளம் 400 மீட்டர் அதிகரித்துள்ளதால் இனி ஏர்பஸ் ஏ-380 ரக விமானங்களும் தரை இறங்கலாம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதையின் நீளம் 400 மீட்டர் அதிகரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏர்பஸ் ஏ-380 ரக விமானங்களும் எளிதாக சென்னையில் தரையிறங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் தற்போது 1,350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நாளுக்கு நாள் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உள்நாடு, சர்வதேச விமான முனையங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நவீன விமான முனையம் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி நடந்து வருகிறது.

சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்காக, கடந்த ஜூலை மாதம் பல்லாவரம், பரங்கிமலை பகுதியில், 21.24 ஏக்கர் நிலம், விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு வழங்கியது. அதில் 10.20 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி ஓடு பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் தற்போது 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3,658 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் கொண்டது. 2வது ஓடுபாதை 2,890 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் உடையது. இதில் முதல் ஓடுபாதையின் நீளத்தை மேலும் 400 மீட்டர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் ஓடுபாதை 4,058 மீட்டர் (4.058 கிமீ) உடையதாக மாறும்.

மேலும் பரங்கிமலை பகுதியில், விமானங்கள் ஓடுபாதையில் தரையிறங்கும் போது, விமானிகளுக்கு உதவும் வகையில், கூடுதல் ஒளி அமைப்பு வசதிகள், நவீன கருவிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், விமானங்கள் தரை இறங்குவதில் சிரமங்கள் இருக்காது.  அதோடு பெரிய ரக விமானமான ஏர் பஸ் ஏ-380 ரகம் விமானங்கள், இதுவரை சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கவில்லை. அந்த விமானம் 3 அடுக்குகளுடன் 746 இருக்கைகள் உடையது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே அந்த விமானங்கள் தரை இறங்க வசதி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளின் நீளம் குறைவாக இருந்ததால் பெரிய ரக விமானங்கள் தரையிறங்குவதில் சிரமங்கள் இருந்தது. தற்போது ஓடுபாதையின் நீளம் அதிகரிக்கப்படுவதால், ஏர்பஸ் ஏ-380 ரக பெரிய விமானங்கள் தரை இறங்கி, புறப்பட்டு செல்ல முடியும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags : Chennai airport ,Airbus , As the length of the first runway at Chennai airport has been increased by 400 meters, Airbus A-380 aircraft can also land.
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்