×

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு தள்ளுபடியானது

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில்  ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஆஜரான இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 இதற்கு பதிலளித்த கே.சி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், தமது நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்  நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அதிமுக உட்கட்சி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Tags : Former Member ,Parliament ,KC Palaniswami ,AIADMK , Former Member of Parliament KC Palaniswami's petition against the AIADMK internal party elections was dismissed
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...