×

மெரினா கடலில் ரூ.80 கோடியில் கலைஞர் பேனா நினைவுசின்னம் அமைக்க ஒன்றிய வல்லுநர் குழு அனுமதி

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும்  திட்டத்துக்கு, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான  அமைச்சகத்தின் வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் ‘பேனா’ நினைவு சின்னம் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மற்றும் அதற்கான செலவு உள்ளிட்ட திட்டமதிப்பீடுகள் குறித்து ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது.

இந்த திட்டத்தின் மீது உரிய ஆய்வுகள் செய்து அதற்கு அனுமதி வழங்கும் வகையில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் சார்பில் வல்லுநர் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. தமிழக அரசு அனுப்பிய பரிந்துரைகள் மீது அந்த குழு உரிய ஆய்வுகள் செய்து, தற்போது மெரினா கடற்கரையில் பேனா சின்னம் நிறுவ முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய அரசின் வல்லுநர் குழு கடந்த மாதம் நடத்திய வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தின் வழியாக தமிழக அரசு அனுப்பிய திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பரிந்துரைகளின் பேரில் பரிசீலிக்கப்பட்டது.  

தமிழக அரசு நிறுவ உள்ள நினைவுச் சின்னம், மெரினா கடற்கரையில்  இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் வைக்கப்பட உள்ளது. அதற்காக, கடந்த மார்ச் 2016ல் வெளியான  கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிக்கையின் பிரிவு 4(2) (ஜெ)ன் கீழ் தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது. இதுதவிர, இந்த திட்டத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய வரைவுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு, சுற்றுச்சூழல் நிர்வாக திட்டம்,  பேரிடர் மேலாண்மை திட்டத்துடன் இணைந்த பேரிடர் மேலாண்மை அறிக்கை, அது தொடர்பான இதர ஆவணங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பான பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இறுதியாக மேற்கண்ட ஆவணங்களை மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் நடத்திய பரிசோதனைகளுக்காக அனுப்பி, அது ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வல்லுநர் குழு கடலோர மண்டல ஆணையத்தின் இறுதி முடிவுக்காக அனுப்பியது. இந்த திட்டத்துக்காக  தமிழக பொதுப்பணித்துறை, கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகள் தொடங்கியது. அதற்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல, மாநில கடற்கரை  ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித்துறை பெற்றுள்ளது.

மேலும், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதுடன், ஒன்றிய சுற்றுச் சூழல், பருவநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறும் முயற்சியில் தமிழக பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கலைஞரின் பேனா நினைவு சின்னம் நிறுவும் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள ஆய்வு எல்லைகள் கோரி ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் வல்லுநர் மதிப்பீட்டு குழுவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம்  தமிழக பொதுப் பணித்துறை கடிதம் எழுதியது. அதன் பேரில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒன்றியஅரசு முதற்கட்ட அனுமதியை அளித்துள்ளது. மேலும் பொதுமக்களின் கருத்துகளை கேட்கவும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றும் அடுத்தகட்ட பணியை தொடங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து பேனா நினைவுச் சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாகவும் பல்வேறுகட்ட அனுமதிகளை பெற வேண்டியுள்ளதாகவும் தமிழக பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது.

திட்டத்தின் சிறப்புகள்
* முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்கிற திட்டம் CRZ-IA, CRZ-2, CRZ-4A பகுதிகளில் அமையும். இந்த திட்டம் ரூ.80 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதுபோல பிற மாநிலங்களில் சில இடங்களிலும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநில அரசின் சார்பில் அரபிக் கடல் பகுதியில் சத்ரபதி சிவாஜியின் நினைவு சின்னம் அமைக்க கடலோர மண்டல ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கலைஞர் நினைவாக அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்ன திட்டத்தில், பேனா அமைக்கப்படும் இடத்துக்கு செல்ல கடல்நீர் மட்டத்தில் இருந்து 42 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவுச் சின்னம் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரத்தை விட சில அடி கூடுதலாகவும் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கடலுக்குள் அமையும் பேனா சின்னத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் மெரினா கடற்கரையில் இருந்து 650 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட பாலத்தின் வழியாக சென்று அங்கு அமைக்கப்படும் 42 மீட்டர் உயர பேனா சின்னத்தை பார்க்கலாம். இது தவிர சில லகுரக வாகனங்களிலும் சென்று பார்க்கவும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது அதிக உயரம் கொண்ட அலைகள் இருக்கும் பகுதி வரை ஒரு எல்லைக்கோடு போட்டு அதுவரை இந்த வாகனங்களை அனுமதிக்க பொதுப்பணித்துறை எல்லை வகுக்க உள்ளது.

* இந்த நினைவுச்சின்னம் அமையும் பகுதியில் கலைஞர் பயன்படுத்திய, இலக்கியத்துக்காக அவர் பங்காற்றியதை காட்டும் வகையில், எழுதுகோல் (பேனா) மாதிரி ஒன்றை அங்கு கண்ணாடிப் பெட்டியில் வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த நினைவுச் சின்னம் அண்ணா சமாதிக்கு அருகில் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் அதிக அளவில் கடிதம் எழுதியவர், மட்டும் அல்லாமல் நிறைய புத்தகங்களும் எழுதியவர் என்பதால் அவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் எழுதுகோல் (பேனா) சின்னம் அமைப்பது அவர் கடித்தின் மேல் உள்ள காதலை காட்டுவதாக  இருக்கும்.

Tags : Union ,Marina Kadala , Union expert panel approves Rs 80 crore artist's pen monument at Marina Kadala
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...