×

சொத்து குவிப்பு விவகாரத்தில் வேலுமணி மீதான 2 மனுவையும் சென்னை ஐகோர்ட் விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘சொத்து குவிப்பு விவகாரத்தில் எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரியது உட்பட எஸ்.பி.வேலுமணியின் 2 மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு விசாரிக்கும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், லஞ்சஒழிப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்தலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதேப்போன்று தன்மீதான சொத்து குவிப்பு வழக்கின் எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் அமர்வு விசாரிக்கிறது.

‘இவ்வாறு இரு வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்க கூடாது’ என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நிராகரித்து விட்டது. இதை எதிர்த்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பி.வி.நாகரத்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்பி வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எந்த வழக்கையும் விசாரிக்கும் அதிகாரம் உண்டு. அவர் தான் அனைத்திற்கும் அதிகாரம் படைத்தவர். ஒன்றிய அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆஜராகக் கூடாது என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதிடுகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு வழக்கறிஞர் தனியார் வழக்குகளை தனிப்பட்ட முறையில் நடத்தக் கூடாதா?  ஏன் காவல்துறை தரப்பு இதனை எதிர்க்கிறது’’ என்றார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தான் பொதுநல வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக முதல்நிலை விசாரணை அறிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் சொத்து குவிப்பு முறைகேடு தொடர்புடைய வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை எவ்வாறு பொதுநல வழக்குடன் விசாரிக்க முடியும்? முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரிய வேலுமணியின் மனு தனி நீதிபதி அல்லது எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். எனவே தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’’ என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘எஸ்.பி.வேலுமணி தன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரியது தொடர்பான வழக்கு உட்பட, இரு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு விசாரிக்கும். இதில் நீதிமன்றம் மீது தேவையற்ற விசாரணையை வைக்க வேண்டாம்’’ எனக்கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Madras High Court ,Velumani ,Supreme Court , Madras High Court to hear 2 pleas against Velumani in asset hoarding case: Supreme Court orders
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு