×

ஆசிய கோப்பையில் மிடில் ஓவர்களில் மந்தமான பேட்டிங்; தேர்வுகுழுவுடன் கங்குலி ஜெய் ஷா ஆலோசனை

மும்பை: அண்மையில் துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான்,இலங்கை அணியிடம் தோல்வி அடைந்ததால் பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்நிலையில் இந்ததொடரில் மிடில் ஓவர்களில் இந்தியாவின் பேட்டிங் மந்தமாக இருந்தது. இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆசியகோப்பையில் இந்தியாவின் பேட்டிங்கைப் பார்த்தால், இலக்கை நிர்ணயிக்கும் போதோ அல்லது சேஸிங் செய்யும்போதோ,  7 முதல் 15 ஓவர்வரை தடுமாறினர். தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 59, ஹாங்காங்கிற்கு எதிராக 62 ரன், பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில்  1 விக்கெட் இழந்து 62ரன்னே எடுத்தனர்.

ஆப்கனை தவிர்த்து இலங்கைக்கு எதிராக இந்த 9 ஓவர்களில் 78 ரன் எடுத்ததுதான் சிறந்த பேட்டிங்காக இருந்தது. இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் மிடில் ஓவர்களில் மந்தமான பேட்டிங் தொடர்பாக தேர்வாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கூடுதல் கவனம் செலுத்துவது மற்றும் டி20 உலகக் கோப்பையின் போது மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என்ன என்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், 7 முதல் 15 ஓவர் வரையில் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை. வெளிப்படையாக, அணியின் சிந்தனைக் குழு இதனை அறிந்திருக்கிறது. அணியில் சில உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர், அவர்கள் அணியின் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் பேட்டிங்கை வெளிப்படையாக மாற்ற முடியும், என்றார்.

சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது ஏன்?

டி.20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாத நிலையில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. சாம்சன் ஒரு உலகத்தரமான வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அணியின் காம்பினேஷன்களையும் நாம் பார்க்க வேண்டும். பேட்டிங்கில் ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், கோஹ்லி , சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் என 5 வீரர்களின் இடங்களை மாற்றவே முடியாது. இடது கை வீரர் என்று பார்த்தால் ரிஷப் பன்ட் மட்டுமே உள்ளார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை 5 பேட்ஸ்மேன்களுக்கு மேல் கண்டிப்பாக பந்துவீசக் கூடிய வீரர்கள்தான் தேவை. ஆட்டத்தின்போது எதாவது பவுலருக்கு காயம் ஏற்பட்டால் சிக்கலாகிவிடும். அப்படி பார்த்தால் சாம்சனைவிட ஹூடாதான் தேவை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.


Tags : Asia Cup ,Ganguly Jai Shah , Sluggish batting in the middle overs in the Asia Cup; Ganguly Jai Shah consultation with selection committee
× RELATED சில்லிபாயிண்ட்…