×

தமிழக அரசு அறிவிப்பு பறவைகள் சரணாலயமான திருப்பூர் நஞ்சராயன்குளம்-இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இதில் சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் மீன்பிடிப்பு பகுதியாக நீர் நிறைந்து காணப்படுகிறது. திருப்பூர் பனியன் நிறுவனங்களில் இருந்து வரும் சாயக்கழிவுகள் கலந்து குளத்தின் நீர் மாசுபட்டு இருந்தது. இதையடுத்து இயற்கை ஆர்வலர்களும்இ பொதுமக்களும் குளத்தை சீரமைக்க வேண்டுமெனவும் அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் இதனை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு 2015-ம் ஆண்டு ரூ.4 கோடி மதிப்பீட்டில் நஞ்சராயன்குளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குளத்தினை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நஞ்சராயன்குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் குளிர்கால வலசை வந்து செல்கின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியிருந்து பின்னர் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச்செல்லும்.

அந்த வகையில் நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் என இதுவரை 181 பறவை இனங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்படும் என சமீபத்தில் தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. இதையடுத்து அதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதனால் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்வருக்கு செல்வராஜ் எம்எல்ஏ நன்றி: திருப்பூர் நஞ்சராயன் குளத்தை தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, எம்எல்ஏ செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூரை அடுத்த சர்கார் பெரியபாளையம் அருகே உள்ள நஞ்சராயன் குளத்திற்கு இந்திய இமயமலை மற்றும் ஐரோப்பிய  நாடுகளிலிருந்து 116 வகையான பறவையினங்கள் வந்து தங்கி செல்கின்றன. இந்த குளத்தினை இயற்கைச் சூழல் மாறாமல் தூர்வாரி, புனரமைத்து பறவைகள் சரணாலயம் மாற்ற வேண்டும்.

அதில் பறவைகளின் புகைப்படங்கள் தமிழ், ஆங்கில, அறிவியல் பெயர்களோடு, பறவையின் வாழ்வியல் குறித்த தகவல்கள்  இடம்பெற  வைக்க வேண்டும். இவைகள் மாணவர்கள்,  சமூக ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், வன உயிரின  காப்பாளர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பறவைகள் சரணாலயம் அமைக்க கோரிக்கை வைத்தேன். அதனையேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நஞ்சராயன்குளத்தை தமிழகத்தின் 17-வது பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அறிவித்து முதற்கட்ட பணிகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்து சட்டபேரைவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி வனத்துறை சார்பில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோரிக்கையினை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள், பறவைகள் காப்பாளர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த நன்றியினை முதல்வருக்கும், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Nadu ,Tirupur ,Nanjarayankulam , Tirupur: Nanjarayan pond is located in an area of about 440 acres near Oothikuli in Tirupur district. About 280 acres of which are fisheries
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்