வேலுமணி, விஜயபாஸ்கர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடுவோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: வேலுமணி, விஜயபாஸ்கர் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்து போராடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதை தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு நடந்துள்ளது.

ஏற்கெனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்பு துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாக கூறும் ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: