×
Saravana Stores

காலி மது பாட்டில்களை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான டெண்டரை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: காலி மது பாட்டில்களை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான டெண்டரை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். உயர்நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி, திண்டுக்கல், கோவை வடக்கு, கோவை தெற்கு, தேனி, நாகப்பட்டினம், நாகர்கோவில், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் என்று சில குடோன்களில் படிப்படியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது.

ஆனால், மற்ற மாவட்ட குடோன்களுக்கு காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை கோராமல் அரசு காலதாமதம் செய்தது. எனவே, காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டி `ஆல் இந்தியா பாட்டில் அசோசியேஷன்’ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், வருமானம் வரக்கூடிய திட்டத்தை செயல்படுத்த ஏன் தாமதம் என்றும், யார் அதிக விலைக்கு டெண்டர் கோரியுள்ளனரோ அவர்களுக்கு டெண்டரை வழங்கவும் அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் ஒப்பந்தப் புள்ளி கோரியது.

அதன் அடிப்படையில் டாஸ்மாக் நிபந்தனையின்படி, உரிய சான்றிதழ்களுடன் ஒவ்வொரு டாஸ்மாக் குடோனுக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் முன்வைப்புத் தொகை செலுத்தி டெண்டரில் பலர் கலந்துகொண்டதாகவும், பிப்ரவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலேயே ‘டெக்னிக்கல் பிட்டை’ அதிகாரிகள் திறந்துவிட்டதாகவும், ஆனால், டெண்டர் போட்டவர்களிடம் பேரம் படியாததால், ‘பைனான்ஸ் பிட்டை’ திறக்காமல் கடந்த 5ம் தேதி டெண்டரை ரத்து செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கிக் குடித்துவிட்டு விவசாய நிலங்கள், காலி மனைகள், பூங்காக்களில் மறைவான இடங்கள், சுற்றுலாப் பகுதிகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் காலி பாட்டில்களை தூக்கி எறிந்து, அவை உடைந்து சுற்றுலாப் பயணிகளுக்கும்,

பொதுமக்களுக்கும், குறிப்பாக பாதசாரிகளுக்கும் பெரும் பாதிப்பை ‘குடிமகன்கள்’ ஏற்படுத்தி வரும் நிலையில், அரசுக்கு வருமானம் வரக்கூடிய இந்த டெண்டரை நான்கு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?. மூன்று ஆண்டுகளாக காலி பாட்டில்களை ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். உடனடியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை விட்டு, சட்டவிதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம்விட்டு, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

The post காலி மது பாட்டில்களை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான டெண்டரை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,CHENNAI ,AIADMK ,general secretary ,Tasmac ,
× RELATED அதிமுக வாக்குகளை எந்த சூழலிலும்...