×

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான மனநலன் காக்கும் திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான மனநலம் காக்கும் ‘மனம்’ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை, அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், கூடுதலான நற்பலன்களை தரும். இவற்றை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளில் ‘மனம்’ என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு மனநல நல்லாதரவு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து வருட மாணவ, மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘மனம்’ அலைபேசி உதவி எண் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் முதல்கட்டமாக மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Ma. Supramanyan , Mental health program for medical college students: Minister M. Subramanian launched
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...