×

கேரளாவில் அடேங்கப்பா...ஒரே ஒரு பூசணிக்காய் ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம்

மூணாறு: கேரளாவில் ஒரு பூசணிக்கு மட்டுமே ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம் போனது. கேரளாவில் ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நாட்களில் கயிறு இழுத்தல், படகு போட்டி, பொது ஏலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பொது ஏலத்தில் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி, பழங்களை மக்கள் ஏலம் விடுவர். நேற்று முன்தினம் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டத்தை அடுத்த செம்மண்ணாற்றில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் கூட்டமைப்பு சார்பில் ஓணம் பண்டிகை பொது ஏலம் நடந்தது.

ஆடு, நாட்டு கோழி, முட்டை என ஏலம் ஆரம்பத்திருந்தே அமர்க்களப்பட்டது. இதில் ஜார்ஜ் என்பவரின் பூசணிக்காய் ஏலத்திற்கு வந்தது. ஆரம்ப விலையாக ரூ.5,000 என ஏலம் சூடுபிடிக்க தொடங்கியது. ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் பூசணிக்காயின் தொகையை உயர்த்தி கொண்டே இருந்தனர். முடிவில் அப்பகுதியை சேர்ந்த சிபி என்பவர் பூசணிக்காயை ரூ.47,000க்கு வாங்கினார். ஒரு பூசணிக்காய் அதிக தொகைக்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘இந்த பூசணிக்காயில் அப்படி என்ன இருக்கிறது; இந்தளவுக்கு ஏலம் கேட்க... என்று அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

Tags : Atengappa ,Kerala , Atengappa in Kerala...a single pumpkin was auctioned for Rs.47 thousand
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...