×

பெரம்பலூர் அருகே கும்பாபிஷேக வெடி விபத்தில் சிறுவன் பலி: 6 பேர் அதிரடி கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அரசலூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் மாரியம்மன் கோயில் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள மகா கணபதி, சிவபெருமான் சன்னதி கோபுரங்களுக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அரசலூர், அன்னமங்கலம், ஈச்சங்காடு, விசுவக்குடி, எசனை, பெரம்பலூர், துறையூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி, வாண வேடிக்கை நடந்தது. அப்போது வெடித்த வெடி தவறி பக்தர்கள் மீது விழுந்தது. இதில் திருச்சியை சேர்ந்த சுரேஷ்(36), பிரியா(21), அரசலூர் கிராமம் தெற்கு தெரு காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் 4ம் வகுப்பு படித்து வந்த லலித் கிஷோர்(9) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் லலித் கிஷோர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

ஆனால் வழியிலேயே லலித் கிஷோர் உயிரிழந்தான். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காயமடைந்த பிரியா கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெடி வைத்த அரசலூரைச் சேர்ந்த நீலகண்டன்(28), மணிகண்டன்(31), தேவராஜ்(50), கனகராஜ்(48), ராமலிங்கம் (66), கோவிந்தசாமி(42), அஜித்குமார், ராஜா மற்றும் வெடிக்கடை உரிமையாளர் ராஜ சுப்ரமணியன் மகன் பழனி(44) ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் நீலகண்டன், மணிகண்டன், தேவராஜ், கனகராஜ், ராமலிங்கம், கோவிந்தசாமி ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Perambalur , Boy killed in Kumbabhishek explosion near Perambalur: 6 arrested
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...