ஊரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் குளம் மழைநீர் வடிகால்வாய் பணிகள்; எம்எல்ஏ வரலட்சுமி அடிக்கல் நாட்டினார்

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் குளம் மற்றும் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகளை திமுக எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் அடிக்கல் நாட்டினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஜெகதீஸ் நகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கவும், இதேபோல், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையோரத்தில் குளம் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், ஊரப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய்கிருஷ்ணன், துணை தலைவர் ரேகாகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் கருணாகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வி.எஸ் ஆராமுதன், தெற்கு ஆப்பூர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில்,  ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஜெகதீஸ் நகரில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர்வடிகால்வாய் அமைக்கவும். இதேபோல், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி சாலை ஓரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கவும், பூமி பூஜை போட்டு பணிகளை மேற்கொள்வதற்காக அடிக்கல் நாட்டினர். பின்னர், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்விதமிழ்ச்செல்வன், ஜே.கே.தினேஷ், மோகனாகண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: