×

திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை; கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அல்பெண்டசோல் என்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி ேநற்று நடைபெற்றது. இந்த பணிகளை துவக்கி வைக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கி, குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, “குடற்புழுவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த குடற்புழு நீக்க நாள் முகாம் நடத்தப்பட்டு, 1 வயது முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 1 முழு மாத்திரை, 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர இதர பெண்களுக்கு ஒரு முழு மாத்திரையும் என வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத்திரை 30 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமின்றி 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த மாத்திரை ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் அதிக நன்மைகள் நமக்கும், நமது சமுதாயத்திற்கும் கிடைக்கப்பெறுகிறது. இந்த அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரைகளை சரியாக அனைவரும் எடுத்துக்கொண்டோமேயானால் நிச்சயமாக நமது மாவட்டத்தில் இந்நோயின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளலாம். ஆகையால், மாணவர்கள் இந்த மாத்திரையின் பயனை அறிந்து அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொள்வதோடு, நமது வீட்டில் உள்ளவர்களிடமும், சுற்றுப்புறத்தாரிடமும் விளக்கி கூறி அவர்களையும் மாத்திரை எடுத்துக்கொள்ள செய்ய வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை 7,06,624 குழந்தைகளுக்கும், 2,46,977 பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,428 பள்ளிகளிலும், 456 தனியார் பள்ளிகளிலும், 68 கல்லூரிகளிலும், 1,756 அங்கன்வாடி மையங்களிலும் என மொத்தம் 3,708 மையங்களில் உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என 4,322 பணியாளர்கள் மூலமாக இம்மாத்திரைகள் வழங்கப்படுகிறது” என்றார். இதனைத் தொடர்ந்து, இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கைகளை சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செய்முறை விளக்க அரங்குகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோவன், சுகாதார மாவட்ட துணை இயக்குநர் ஜவஹர்லால், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், கச்சூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலமணிகண்டன், ஊராட்சி தலைவர் ஷோபன் பாபு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Tiruppachur Government High School , Deworming pills for students in Tiruppachur Government High School; Presented by the Collector
× RELATED திருப்பாச்சூர் அரசு...