×

அரசியல் சாசன அமைப்புகளை கையில் வைத்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர்களை பாஜ மிரட்டுகிறது: ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி

நாகர்கோவில்: அரசியல் சாசன அமைப்புகளை கையில் வைத்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர்களை பாரதிய ஜனதா மிரட்டி வருகிறது என்று ராகுல்காந்தி கூறினார். தக்கலை புலியூர்குறிச்சியில் நேற்று மதியம் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் மேற்கொண்டுள்ள இந்த பயணம், நமது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து, அதை மக்களுக்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ. செய்த அழிவுகளை திருத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்துள்ளது. இந்த யாத்திரையில் நான் ஒரு பங்கேற்பாளனாக இருக்கிறேன்.

இது ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக பயணம் அல்ல. கருத்தியல் ரீதியான ஒரு போராட்டம். இந்த போராட்டம் எளிதில் முடிவுக்கு வந்து விடாது. நாட்டில் பன்முகத்தன்மையை ஆதரிப்பது என்பது ஒரு கருத்தியல் ஆகும். அனைத்தையும் ஒருமுகமாக்க முயல்வதும் ஒரு கருத்தியல் ஆகும். இந்த இரு கருத்தியலுக்கும் இடையே மோதல் இருக்கிறது. கருத்தியல் போர் என்பது தொடரும். இந்தியாவின் கட்டமைப்பை சீர்குலைப்பவர்களுக்கும், அதை காப்பாற்ற நினைப்பவர்களுக்கான போராட்டமாக இது அமைந்துள்ளது.

காங்கிரசில் 2ம் கட்ட தலைவர்கள் தலைமைக்கு எதிராக இருக்கிறார்கள். சிலர் விலகுகிறார்கள் என்கிறீர்கள். பா.ஜ.வின் வழிமுறை என்ன என்பது உங்களுக்கு தெரியும். சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அனைத்து அரசியல் சாசன அமைப்புகளையும் கையில் வைத்துக் கொண்டு பா.ஜ. மிரட்டுகிறது. அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அந்த அழுத்தத்தை எதிர் கொள்ள முடியாதவர்கள், பா.ஜ.வை அனுசரிக்க எண்ணுகிறார்கள். ஆனால் இதை எதிர்த்து போராடுவது எனது குணம் ஆகும். இது கடினமான போராட்டம் ஆகும்.

அரசியல் சாசன அமைப்புகளை பாரதிய ஜனதா கைப்பற்றி விட்டது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே இந்த யாத்திரை. இந்த நாட்டில் தற்போது சில தொழிலதிபர்கள் தான் வாழ்கிறார்கள். உலகின் 3 வது இடத்துக்கு ஒருவர் வந்து விட்டார். ஆனால் ஒரு பக்கம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்ந்துள்ளது. இது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. நாட்டில் மக்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழ் கற்க விரும்புகிறேன்
பேட்டியின் போது தமிழில் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது பேசிய ராகுல்காந்தி, தமிழ் சிறந்த மொழியாகும். அழகான மொழி ஆகும். நான் தமிழ் கற்க விரும்புகிறேன். நீங்கள் கேள்வி கேட்கும் போது எனக்கு கடினமாக உள்ளது என்றார். தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளை செல்வபெருந்தகை, செல்வக்குமார் ஆகியோர் மொழி பெயர்த்து ராகுலிடம் கூறினர்.

* காங்கிரஸ் தலைமை பொறுப்புக்கு வருவீர்களா?
பேட்டியின் போது ராகுல் கூறியதாவது, நான் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆவேனா என கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கான பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல. கட்சி தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. அதுவரை காத்திருங்கள். நான் இந்த விஷயத்தில் எனக்குள் எந்த குழப்பமும் இல்லை. கார்ப்பரேட்டுகளை வைத்து சிறு, குறு நிறுவனங்களை நசுக்கும் மோசமாக கொள்கைகளை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

Tags : Baja ,Congress ,Rakulkandi Stirma , BJP is threatening Congress leaders by keeping constitutional institutions in their hands: Rahul Gandhi in sensational interview
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்