×

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு; பில்லூர்- சேர்ந்தனூர் தரைபாலம் மூழ்கியது: 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பில்லூர்- சேர்ந்தனூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இதன் துணை ஆறுகளான மலட்டாறு, கோரை போன்ற ஆறுகளிலும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது‌. இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் - சேர்ந்தனூர் சாலையில் மலட்டாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தரைப்பாலத்திற்கு மேல் சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் ஆனாங்கூர், புருஷானூர், அரசமங்கலம், தென்மங்கலம், வி.அகரம், பிள்ளையார்குப்பம், பஞ்சமாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் விழுப்புரம், பண்ருட்டி போன்ற ஊர்களுக்கு செல்ல சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.


Tags : Malattadu ,Viluppuram ,Billur ,Chedthanur , Flooding in Malatta near Villupuram; Pillur- Cherhadnoor flyover sinks: 20 villages affected
× RELATED கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்