விநாயகர் சதுர்த்தி விழாவில் சத்தமாக பாட்டு வைத்த தகராறில் வாலிபர் சரமாரி வெட்டி கொலை; பல்லாவரம் அருகே பயங்கரம்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே  விநாயகர் சதுர்த்தி விழாவில் பாட்டு சத்தமாக வைத்ததை தட்டிக்கேட்ட தகராறில் வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற அவரது அண்ணனுக்கும் சரமாரி வெட்டு விழுந்தது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலயைில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, 6 பேரை கைது செய்தனர். பல்லாவரம்  அடுத்த பம்மல், நாகல்கேணி, காந்தி நகர், பாலகுருசாமி தெருவை சேர்ந்தவர்கள்  சரவணன் (56), நாகு (எ) ஞானசம்பந்தன் (46), சகோதரர்கள். இன்னும்  திருமணமாகவில்லை. இருவரும் அதே பகுதியில் சாலையோரம் தங்கியிருந்து, கூலி  வேலை செய்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் ஒரு கோஷ்டியினர் விநாயகர்  சதுர்த்தியை நேற்று முன்தினம்  விமரிசையாக கொண்டாடினர். அப்போது, சிலை வைத்து  அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும், ரேடியோ வைத்து பாட்டு  சத்தமாக வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணனும், ஞானசம்பந்தனும் விழா  நடத்தியவர்களிடம் சென்று, ‘‘பாட்டு சத்தம் அதிகமாக இருப்பதால், காது வலிக்கிறது. கொஞ்சம் சவுண்ட்டை குறைத்து வையுங்கள்’’ என்று கூறியுள்ளனர். உடனே, வழிபாட்டு குழுவை சேர்ந்த லாரி டிரைவர்  ராஜேஷ்குமார் (34) என்பவர், ‘‘அதெல்லாம் குறைக்க முடியாது,’’ என இருவரிடமும் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இரு தரப்புக்கும் தகராறு  ஏற்பட்டுள்ளது.

பின்னர் வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பினரும் கைகளால்  சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, ஞானசம்பந்தனும், சரவணனும் சேர்ந்து,  ‘ஒழுங்காக நடந்து கொள். இல்லையென்றால்,  உன்னை கொலை செய்து விடுவோம்’’ என்று ராஜேஷ்குமாரை மிரட்டியுள்ளனர். இதனால்  ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், தன்னை ஞானசம்பந்தனும், சரவணனும் கொலை  செய்வதற்கு முன், தான் முந்திக்கொள்ள வேண்டும் என்று அவர்களை  தீர்த்துக்கட்ட தனது நண்பர்களுடன் திட்டமிட்டுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு தனது  நண்பர்கள் 5 பேரை அழைத்துக்கொண்டு, ஞானசம்பந்தன், சரவணன் ஆகியோரை  தேடியுள்ளார். அப்போது, நாகல்கேணி, புதிய மீன் மார்க்கெட் பின்புறம் உள்ள  முட்புதரில் இருவரும் மது அருந்திக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே,  அங்கு நண்பர்களுடன் சென்றார் ராஜேஷ்குமார். அங்கு ஞானசம்பந்தன், சரவணன்  ஆகியோரை பார்த்து, ‘‘என்னையா கொலை செய்வதாக மிரட்டினீர்கள். உங்களை உயிரோடு  விட்டால் தானே’’ என கூறி ராஜேஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஞானசம்பந்தன் மற்றும்  சரவணனை சரமாரியாக வெட்டி விட்டு நண்பர்களுடன் தப்பினார். இதில்  ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஞானசம்பந்தன் பரிதாபமாக  உயிரிழந்தார். சரவணன் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

தகவலறிந்த சங்கர்நகர்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று  வருகிறார். பின்னர், ஞானசம்பந்தனின் உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த ராஜ் (எ) ராஜேஷ்குமார் (34), வெற்றிச் செல்வன் (26),  ஜெயகுமார் (25), முகமது அன்வர் (24), முகமது இலியாஸ் (23), வசந்தகுமார்  (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர்.

கொலையான ஞானசம்பந்தன் மீது பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: