×

சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் அதிகரிப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், மும்பை, கொச்சி, மைசூர் ஆகிய நகரங்களுக்கு இம்மாதத்தில் புதிதாக கூடுதல் விமான சேவைகள் துவங்குகின்றன. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணிகள் உற்சாகம் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு விமான நிறுவனம், மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளை இயக்கி வருகிறது. அந்நிறுவனம் தற்போது சென்னையை மையமாக வைத்து, அதிக உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இம்மாதம் 10ம் தேதி முதல் நாள்தோறும் பெங்களூரில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமானநிலையத்துக்கு காலை 9.35 மணியளவில் வந்து சேரும் வகையில் விமான சேவையை தொடங்குகிறது.
 
பின்னர் அதே விமானம் மீண்டும் காலை 10.15 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, காலை 11.20 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது. இதையடுத்து மதியம் 12 மணிக்கு பெங்களூரில் புறப்பட்டு, பிற்பகல் 1.05 மணிக்கு சென்னை வந்து சேருகிறது. பின்னர் பிற்பகல் 1.20 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, பிற்பகல் 2.35 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது. இந்த விமானம் வரும் 10ம் தேதி முதல் தினசரி சேவையாக இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஏற்கெனவே நாள்தோறும் 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது இனி 22 விமான சேவைகளாக அதிகரிக்கும்.

இதேபோல் இம்மாதம் 15ம் தேதி முதல் மாலை 6.10 மணிக்கு மும்பையில் புறப்படும் விமானம், இரவு 7.55 மணியளவில் சென்னை வந்து சேரும். அதன்பின், அதே விமானம் மீண்டும் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணியளவில் மும்பை சென்று சேரும். இதுவரை சென்னை-மும்பை இடையே மொத்தம் 38 விமான சேவைகள் உள்ளன. இனி அவை 40 சேவைகளாக அதிகரிக்கும்.

மேலும், இம்மாதம் 26ம் தேதியில் இருந்து புதிதாக சென்னையில் இருந்து கொச்சிக்கும் கொச்சியில் இருந்து சென்னைக்கும் தினசரி விமானங்களை இயக்குகிறது. சென்னையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மாலை 6 மணிக்கு கொச்சி சென்று சேரும். கொச்சியில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.15 மணியளவில் சென்னை வந்து சேரும். சென்னை-கொச்சி இடையே இதுவரை மொத்தம் 8 விமான சேவைகள் உள்ளன. இனி அது 10 விமான சேவையாக அதிகரிக்கிறது.

அதோடு, தற்போது சென்னையில் இருந்து மைசூருக்கு தனியார் பயணிகள் விமானம் மட்டுமே ஒருமுறை இயங்கி வருகிறது. தற்போது மைசூர் சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், மேலும் ஒரு விமான நிறுவனம் புதிதாக சென்னை- மைசூர்-சென்னை இடையே வாரத்தில் ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கு புதிய விமான சேவைகளை துவக்குகிறது. சென்னையில் காலை 9.25 மணிக்கு புறப்பட்டு, காலை 11 மணியளவில் மைசூர் சென்று சேருகிறது. பின்பு மைசூரில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் ஒரு மணிக்கு சென்னைக்கு வருகிறது.
 
இந்த விமானம் ஏடிஆர் எனும் சிறிய ரக விமானம். இதில் 74  பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த விமானத்தில் சலுகை கட்டணமாக ஒரு வழி பயணத்துக்கு ₹4,678 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Chennai Airport , Increase in domestic flight services at Chennai Airport
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்