சென்னை: நம் அனைவரின் விருப்பமான உச்ச நீதிமன்றத்தின் கிளை விரைவில் சென்னையில் அமையும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா, சட்டகல்லூரி புதுப்பிக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் சென்னை உச்ச நீதிமன்றம் நீதிபதி சஞ்சய் கிஷன் பேசியதாவது:
காஷ்மீர் எனக்கு பூர்வீகம் இடம். டெல்லியில் நான் பிறந்தாலும், தொழில் சார்ந்து தமிழ்நாட்டிற்கு வந்ததால், எனக்கு இம்மாநிலம் புகுந்த வீடாக மாறிவிட்டது. ஐகோர்ட் தலைமை நீதிபதி அமரும் கோர்ட் அறை உலகத்திலேயே அழகான சிறந்த கோர்ட் அறையாகும். நான், பிற மாநில நீதிபதிகள், வக்கீல்களிடம் , ஒரு முறை சென்னை ஐகோர்ட்டை பார்த்து வாருங்கள் என்று அடிக்கடி கூறுவேன். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் மட்டுமே, நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்து விடலாம் என்று கருதக்கூடாது. தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தாலே, தரமான நீதி பரிபாலனத்தை விரைவுப்படுத்த முடியும். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளில் 20 சதவீத வழக்குகள் காலாவதியாகி விட்டவை.
இதை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டும். அதை செய்தாலே, நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும். உள்கட்டமைப்பு என்பது வன்பொருள் (ஹார்டுவேர்). நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோர் மென்பொருள் (சாப்ட்வேர்). இந்த இரண்டும் இணைந்து, சீராக இயங்கினால் மட்டுமே நீதித்துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார். உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:சென்னை எப்போதும் எனக்கு 2வது வீடு. என் 2வது வீட்டு விழாவுக்கு என்னை அழைத்ததில் மகிழ்ச்சி. புதிய கட்டிடம் கட்டப்படுவதும், பழையது புதுப்பிக்கப்படுவதும் பெருமைமிக்க தருணம். நீதியின் தரத்தை, நீதித்துறையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்வோம். எதற்காக தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிறைவேற்றும்.இவ்வாறு அவர் பேசினார்.
உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது: 130 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தை கட்டுவதற்கு ரூ.12.98 லட்சம் தான் செலவானது. அது இன்றும் உறுதியாக நிற்கிறது. இதை பொதுப்பணித்துறை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்று புதிய கட்டிடம் கட்ட ரூ.1,000 கோடிக்கும் மேல் தேவைப்படுகிறது. இதன் மூலம் நான் எதையும் குறிப்பால் உணர்த்தவில்லை. சமூகத்துக்கு நீதியில் நெருக்கடி வராமலிருக்க நீதிமன்றத்துக்கு நிதி நெருக்கடி வராமல் இருக்க வேண்டும். அது இன்று சரியாக நிறைவேறியுள்ளது. இந்நாளை நினைவில் கொள்ள வேண்டும். நான் சென்னை பழைய சட்டக் கல்லூரியின் மாணவன். கல்லூரிக்கு வழக்கமாக வந்தவர்கள் என் போல் நீதிபதிகளாகி விட்டனர். சட்டக்கல்லூரி தேர்தல்களுக்கு மட்டும் வந்தவர்கள் அரசியல்வாதிகளாகி விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசியதாவது: உயர் நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், மேம்பாட்டுக்காக ஒத்துழைக்கும் தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.500 கோடி மதிப்பிலான இடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்துள்ளார். புதிய கட்டிடத்தில் 160 நீதிமன்ற அறைகள் கட்டப்பட்டுள்ளன. பாரம்பரிய சட்டக் கல்லூரி கட்டிடம், நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் முயற்சியால் உயர் நீதிமன்றத்துக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது.பாரம்பரியமிக்க பழைய சட்டக் கல்லூரி கட்டிடம், புதுப்பிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. நம் அனைவரின் விருப்பமான உச்ச நீதிமன்றத்தின் கிளை விரைவில் சென்னையில் அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.