×

சென்னை விமான நிலையத்திற்கு அதிக மோப்ப சக்தி நாய்கள்: பெல்ஜியம் மேலன்வா இனத்தை சேர்ந்தது

சென்னை: சென்னை விமான நிலையத்தில், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக மோப்ப சக்தியுடைய ‘பெல்ஜியம் மேலன்வா இனத்தை சேர்ந்த இரு மோப்ப நாய்கள் வரும் டிசம்பரிலிருந்து பயன்படுத்தப்பட உள்ளது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தங்களுக்கு உதவும் வகையில், மோப்ப நாய்களை பயன்படுத்துவது வழக்கம். அந்தவகையில், வெடி மருந்துகள், வெடிகுண்டுகள் போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் தற்போது, சென்னை விமானநிலையத்தில் மோப்ப நாய் பிரிவில், புதிய வரவாக பெல்ஜியம் நாட்டின், பெல்ஜியம் மேலன்வா இனத்தைச் சேர்ந்த 2 நாய் குட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வகை நாய்கள், சர்வதேச அளவில் மோப்ப சக்தியில் சிறந்து விளங்கக் கூடியவை. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில்  இவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நாய்குட்டிகளுக்கு பைரவா மற்றும் வீரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவை இரண்டும் தற்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புபடை பயிற்சி பள்ளிக்கு 6 மாத பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளன. அங்கு வெடிபொருட்கள், வெடிகுண்டுகள், வெடி மருந்துகளை கண்டறியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மோப்ப பயிற்சியில் நாய் குட்டிகள் இரண்டும் சிறப்பாக செயல்படுவதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளனர். இந்த பைரவா, வீரா நாய்குட்டிகள் வரும் நவம்பர் இறுதியில் 6 மாத கால பயிற்சியை நிறைவு செய்கின்றன. அதன்பின்பு வரும் டிசம்பர் மாதம் முதல் சென்னை விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai Airport , High Sniffer Dogs for Chennai Airport: Belgian Malinois
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!