×

5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாத கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாத கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தேசிய அளவில் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பை இன்னும் உயர்த்தவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி வாய்ப்பை உறுதிசெய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு தாமதப்படுகிறது.

கிரீமிலேயர் வருமான வரம்பை ஒன்றிய அரசு உயர்த்தாமல் காலம் தாழ்த்துவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1990ல் ஒன்றிய அரசு வேலை வாய்ப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட போது எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்தான் கிரீமிலேயர் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு ஓ.பி.சி. ஓடஒதுக்கீடு மறுக்கப்படும். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டிய கிரீமிலேயர் உச்சவரம்பு 5 ஆண்டாக உயர்த்தப்படவில்லை. கடைசியாக 2017ல் கிரீமிலேயர் வரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போதைய நிலையில், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளவர்கள் கிரீமிலேயர்கள் ஆவார்கள். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதியும், ஐஐடி அட்வாண்ஸ்டு தேர்வு முடிவு 11ம் தேதியும் வெளியாகின்றன என ராமதாஸ் தெரிவித்தார்.

Tags : Bamaka ,Ramadoss , Creamy layer range, Rs.15 lakhs, founder Ramadoss
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...