×

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்தில் கூறியிருப்பதாவது: இந்த மங்களகரமான விநாயகர் சதுர்த்தி  நன்னாளை முன்னிட்டு, தமிழ்நாடு மக்களுக்கு எனது மனமார்ந்த  நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறையருளால் நமது ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட இலக்குகளை நோக்கிய நமது அனைத்து முயற்சிகளும், செயல்களும் எவ்வித  தடையுமின்றி வெற்றி பெறட்டும். “ அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் 2022  நல்வாழ்த்துக்கள். ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக, ஒருங்கிணைப்பாளர்): விநாயகர் அருளால், அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும், அன்பும், அமைதியும் நிலவட்டும். இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும், வாழ்வை செழிப்பாக்கும்  விநாயகரை வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா, தலைவர்): விநாயகரை வழிபட்டு வருங்காலங்கில் நாம் எடுக்கும் அத்துணை முயற்சிகளும் வெற்றியடைய வணங்குவோம். டிடிவி.தினகரன் (அமமுக, பொது செயலாளர்): எளிமை மட்டுமின்றி அன்பு காட்டுதல், அரவணைத்தல், பெற்றோரை மதித்தல் என விநாயகர் வழிபாட்டில் இருந்து நாம் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம், தலைவர்): விநாயகர் சதுர்த்தி உலகில் வாழும் அனைத்து தமிழர்களின் திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும். சரத்குமார் (சமக, தலைவர்): இந்த இனிய திருநாளில், தொழில், வணிக வியாபாரங்களில் தடைகள் நீங்கவும், மக்கள் அனைத்து வளமும், நலமும் பெற்று முன்னேற்றம் காணவும் நல்வாழ்த்துகள். வி.எம்.எஸ்.முஸ்தபா (தமிழ்நாடு முஸ்லிம் லீக், தலைவர்): விநாயகர் அறிவு, வளம் மற்றும் நல்வாய்ப்பு ஆகியவற்றின் திருவுருவாக இந்து மக்களால் போற்றப்படுகிறார். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும். எம்.வி.சேகர் (கோகுல மக்கள் கட்சி, தலைவர்): முதல் கடவுள் விநாயகர் அருள் பெற்று தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றியாவது போல, நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற்று விநாயகர் சதுர்த்தியை ஆனந்தமாய் கொண்டாடி மகிழும் வேளையில், வளமான தமிழகத்தை உருவாக்க சமதமேற்போம். இதுபோல, தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Ganesha Chaturthi , Ganesha Chaturthi celebration; Greetings from political party leaders
× RELATED மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் விநாயகர்...