×

என்டிடிவி பங்குகளை மாற்ற செபி அனுமதி தேவையில்லை: அதானி குழுமம் பதில்

புதுடெல்லி: என்டிடிவி பங்குகளை வாங்குவதில் செபியின் அனுமதி தேவையில்லை என அதானி குழுமம் கூறி உள்ளது. முன்னணி ஆங்கில செய்தி சேனலான என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியதாகவும், மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க வெளிப்படையான கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதன் மூலம், என்டிடிவியை அதானி குழுமம் கைப்பற்ற இருப்பதாக கூறப்பட்டது.

என்டிடிவியின் விளம்பர நிறுவனமான ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடந்த 2009-10ம் ஆண்டில் விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்) எனும் நிறுவனத்திடம் ரூ.403 கோடி கடன் பெற்றது. இதனை திருப்பி தர முடியாததால், ஆர்ஆர்பிஆர் பங்குகள் விசிபிஎல் நிறுவனத்தின் வசமானது. ஆர்ஆர்பிஆர் நிறுவனம் என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது. அந்த பங்குகளும் விசிபிஎல் நிறுவனம் வசமானது.

இதற்கிடையே, விசிபிஎல் நிறுவனத்தை அதானியின் நிறுவனம் ரூ.113 கோடிக்கு வாங்கியது. இதன் காரணமாகத்தான் என்டிடிவி பங்குகள் அதானி குழுமத்தின் வசமாகி உள்ளது. இவ்வாறு ஆர்ஆர்பிஆர் பங்குகளை மாற்ற இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை என என்டிடிவி நிறுவனம், அதானி குழுமத்திற்கு கடிதம் எழுதியது.

இதனை நிராகரித்துள்ள அதானி குழுமம், ‘என்டிடிவி நிறுவன பங்குகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என பிரணாய் ராய், ராதிகா ராய்க்கு செபி கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி உத்தரவிட்டது. இது ஆர்ஆர்பிஆர் நிறுவனத்திற்கு செல்லாது. எனவே, செபியின் அனுமதி தேவையில்லை’ என பதில் அளித்துள்ளது.


Tags : SEBI ,NDTV ,Adani Group , NDTV stake, no need for SEBI approval, Adani Group answers
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்