×

இரண்டாவது ஓடுபாதையை பயன்படுத்துவதில் சிக்கல், சென்னை விமான நிலைய ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு விமான நிலைய ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 ஓடு பாதைகள் உள்ளன. முதல் ஓடு பாதை 3.66 புள்ளி கிமீ நீளமும், 2வது ஓடு பாதை 2.89 கிமீ நீளமும் உடையது. இதில் முதல் ஓடு பாதையில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்குகின்றன. 2வது ஓடு பாதையில் சிறிய ரக விமானங்கள் தரை இறங்குகின்றன. இந்நிலையில், 2வது ஓடு பாதை 2.89 கிமீ நீளமுடையதாக இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. 2.11 கிமீ நீளத்தை மட்டுமே 2வது ஓடு பாதையில் பயன்படுத்த முடிகிறது. இதற்கு காரணம், இப்பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளன. விமானநிலைய பின்பகுதியில் கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்கள், பெரிய மரங்கள், மின்சார கோபுரங்கள், மின்விளக்கு கம்பங்கள், என பல்வேறு ஆக்கிரமிப்பு உள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் 2வது ஓடுபாதையில் தரை இறங்கவேண்டிய விமானங்கள், பாதுகாப்பு நலன் கருதி ஓடு பாதையை முழுமையாக பயன்படுத்தாமல் குறிப்பிட்ட அளவு தூரத்தையே பயன்படுத்துகின்றன. இதனால் சென்னை விமானநிலையத்தில் 2 ஓடு பாதைகள் இருந்தாலும் முழுமையாக பயன்படுத்தி, அதிக விமானங்கள் தரையிறங்க,
புறப்பட செய்ய முடியவில்லை.

இதையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் நிபுணர் குழு அமைத்து, ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு நடத்தியது. அதில், சென்னை விமானநிலையத்தில் விமான சேவைக்கு, குறிப்பாக 2வது ஓடு பாதையில் விமானங்கள் இயக்குவதற்கு இடையூறாக 192 ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, விமானநிலைய ஆணையம், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை விமானநிலைய அதிகாரிகள், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்பு கட்உயர்ந்த மரங்கள், மின்கோபுரங்கள், மின்விளக்கு கம்பங்களை அகற்றி, சென்னை விமான நிலையத்தில் 2வது ஓடு பாதையை முழு அளவில் பயன்படுத்தவும், அதிக விமானங்கள் தரை இறங்கவும், புறப்படுவதற்கான ஏற்பாடுகளை எடுக்கவேண்டும் எனவும் இந்திய விமான நிலைய ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் விமான நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

Tags : Chennai airport ,Airport Authority ,Chengalpattu , The problem of using the second runway, Chennai Airport needs to be cleared; Airport Authority orders Chengalpattu district administration
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்