×

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஆசிரியர்களை எதற்காக கைது செய்தார்கள்?.. போலீஸ் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார்.  

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்பட 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.கைது செய்யப்பட்டவர்களில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 4 பேர்  ஜாமீன் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.  தங்கள் மீது என்ன வழக்கு பதிவாகியுள்ளது என்றே தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால், மாணவியின் பெற்றோர் தரப்பில், தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்குகளில் காவல்துறை நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம்  செய்தனர். ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும்.மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

Tags : Kallakurichi , Kallakurichi student death case, teachers, police response Court order
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...