ஊட்டி - மஞ்சூர் சாலையில் கொல்லிமலை சந்திப்பு பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

ஊட்டி : ஊட்டி - மஞ்சூர் சாலையில் கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை துவக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான மற்றும் பள்ளதாக்கு பகுதிகளில் அமைக்கப்பட்டள்ளது. இதனால், சாலையோரங்களில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு சாலை பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையும் பல இடங்களில் குறுகலாகவும், அதிக வளைவுகளையும் கொண்டதாக உள்ளது. குறிப்பாக, காந்திப்பேட்டை அருகேயுள்ள கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதியில், பள்ளத்தாக்கின் பக்கவாட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சாலை பழுதடையாமல் இருக்க அப்பகுதியல் தடுப்புச்சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையின் போது, இச்சாலையில் கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதியில் இருந்த தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், இவ்வழியாக அரசு பஸ்கள் மற்றும் காய்கறி லாரிகள் என கனரக வாகனங்கள் சென்று வருவதால், தடுப்புச்சுவர் பலவீனம் அடைந்து விபத்து ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது. எனவே, இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: