×

ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இலவச மின்சாரம் ரத்தாகுமா? கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் அச்சம்

சென்னை: ஒன்றிய அரசின் மின்சார திருத்த மசோதாவில் மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் விரோதமான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் காரணமாக விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம்  விவசாயிகள் மத்தியில் உள்ளது என தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பாக நடத்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் தெரிவித்தார். பிறகு இதுதொடர்பான அறிக்கை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதற்காக, மாநிலம் முழுவதும்  கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். இதில், ஆணையத்தின் உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகள், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், விவசாயிகள், இறால் மீன் பண்ணை உரிமையாளர்கள் என பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

அதன் விவரம் வருமாறு: இலவச மின்சாரம் ரத்து அச்சம்: கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம் பேசுகையில், ‘ உரிய காலத்தில் மின்துறையில் கட்டுமானப் பணிகளை முடிக்காததினால் 12,747 கோடி செலவு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் தலையில் சுமத்துவது நியாயமில்லை. கூடுதல் செலவை ஒப்பந்தகாரர்களும், அதற்கு பொறுப்பான அதிகாரிகளும் தான் ஏற்க வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படும் நீண்ட கால ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.

தற்போது விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மின்சார திருத்த மசோதா 2022ல் நுகர்வோர் ஒவ்வொருவரும் கட்டாயம் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் விரோதமான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் காரணமாக விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது.

சோலார் எனர்ஜி:  தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் மாநில அமைப்பு  செயலாளர் கந்தவேல், ‘கட்டண உயர்வால் விசைத்தறி, நூல்,  கார்மென்ட் போன்ற தொழில்கள் பாதிக்கப்படும். இந்த பிரிவில் 1.41 லட்சம்  சர்வீஸ் உள்ளது. இதில் 14 ஆயிரம் பேர் 750 யூனிட்டுக்குள் தான்  பயன்படுத்துகிறோம். எங்களுக்கு சோலார் எனர்ஜி வழங்க வேண்டும். மானியம்  வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர்  செல்வா, ‘கட்டாயம் 10% நிலக்கரி வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டும் என  நிர்பத்திக்கப்படுகிறது. பெரும் முதலாளிகளை காப்பாற்றுவதற்காக ஒன்றிய அரசு  திட்டம் போடக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் கட்டணம் உயர்த்தலாம் என்று  கூறப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மின்சார கட்டண உயர்வு  முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.

Tags : Will the Union Government's Electricity Act Amendment Bill cancel free electricity? The farmers' union is afraid in the consultation meeting
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...