×

ஆவுடையார்கோவில் பகுதியில் ஆடுகள் திருட்டு வழக்கில் 5 பேர் கைது

அறந்தாங்கி : ஆவுடையார்கோவில் அருகே ஆடுகளை திருடிச் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை அடுத்த ஆவணம்பெருங்குடி, கிளாரவயல் உள்ளிட்ட பகுதிகளில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கிளாரவயலைச் சேர்ந்த பழனி, ஆவணம்பெருங்குடி மதலைமேரி உள்ளிட்டோர் திருப்புனவாசல் மற்றும் மீமிசல் காவல்நிலையங்களில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் கோட்டைப்பட்டினம் போலீஸ் டி.எஸ்.பி கவுதம் உத்தரவின்பேரில் ஆடு திருடும் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது ஆவுடையார்கோவில் அருகே உள்ள பேயாடிக்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவர்களை போலீசார் திருப்புனவாசல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் பேயாடிக்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் புத்தனேந்தலைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரத்பாபு(28), கடலாடி பன்னந்தை கற்புலியன் மகன் ரமேஷ்(33), பட்டணம்காத்தான் காளிதாஸ்(46), தஞ்சாவூர் மாவட்டம் முதுகாடு நாகராஜன் மகன் சூர்யா(19), அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் மகன் மோகன்( 23) என்பதும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஆவணம்பெருங்குடி, கிளாரவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை சரக்குவாகனம் மூலம் திருடிச்சென்று சந்தைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் ஆடுகளை திருடிச் சென்று விற்பனை செய்யும் பணத்தை ஜாலியாக இருக்க செலவு செய்ததாகவும் தெரிவித்தனர்.உடனே போலீசார் ஆடுகளை திருடிச்சென்ற 5 பேரையும் கைது செய்ததுடன், அவர்கள் திருடி வைத்திருந்த 58 ஆடுகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.ஆவுடையார்கோவில் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை விரைந்து கைது செய்த போலீசாரை மணமேல்குடி போலீஸ் டி.எஸ்.பி கவுதம் பாராட்டினார்.

Tags : Auduyarkovil , Aranthangi: Police arrested 5 people who stole goats near Aavudayarkovil. Puthukottai district.
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை!