×

ஆர்.கே.பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி கழுத்தறுத்து படுகொலை: ராணுவ வீரர் கைது

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் விஜயன் (35). இவர், இந்திய ராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வீரராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் விஜயன் பணிபுரிகிறார். இவருக்கு மனைவி மோகனா (30) மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது ஒரு மாத விடுமுறையில் விஜயன் சொந்த ஊரான செல்லாத்தூருக்கு வந்துள்ளார். அங்கு புதிய வீடு கட்டுவது தொடர்பாக ராணுவ வீரர் விஜயனுக்கும் அவரது மனைவி மோகனாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு மதுபோதையில் ராணுவ வீரர் விஜயன் வீடு திரும்பியுள்ளார். அப்போது புதிய வீடு கட்டும் பணியில் ஏற்பட்ட கணக்கு வழக்கு தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமான ராணுவ வீரர் விஜயன், தன்னிடம் இருந்த பேனா கத்தியால் மனைவி மோகனாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்துள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு மோகனா கழுத்து அறுபட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்த மோகனாவின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அச்சடலத்தை திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை படுகொலை செய்த ராணுவ வீரர் விஜயனை கைது செய்து, பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post ஆர்.கே.பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி கழுத்தறுத்து படுகொலை: ராணுவ வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : RK Pettai ,PALLIPATTA ,Vijayan ,Veerasamy ,Selathur ,RK Pettai Panchayat, Thiruvallur District.… ,
× RELATED நடிகர் பிரதீப் விஜயன் மர்ம சாவு