×

சென்னையில் ஒரு மணி நேரம் இடியுடன் கனமழை கொட்டியது: வெயில் வாட்டி எடுத்த நிலையில் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு தொடர்ந்து ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் புழுக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.

கடந்த சில வாரங்களாக சென்னையில் வெயில் மற்றும் வெக்கை காரணமாக மக்கள் காலை முதல் மாலை வரை வெளியில் வர முடியாமலும், வீட்டில் இருக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் சென்னையில் நேற்று மதியம் முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு புழுக்கமான சூழல் நிலவியது. இதையடுத்து, திடீரென இரவு 8 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை சென்னை முழுவதும் பெய்யத் தொடங்கியது.

மயிலாப்பூர், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், வடபழனி, கிண்டி ஆகிய இடங்களிலும், திருமுல்லைவாயில், போரூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மதுராந்தகம், நங்கநல்லூர், புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை சூறைக்காற்றுடன் பெய்தது. அதேபோல் மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய மழை யின் காரணமாக 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. 5 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Chennai , Chennai, heavy rain with thunder, people are happy
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...