×

பருவமழை துவங்கும் முன் கோமுகி அணை நிரம்பியது: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கோமுகி  அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இந்த அணையில் உள்ள ஆற்று பாசனம் மற்றும் முதன்மை கால்வாய் பாசனம் மூலம் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின்மூலம் சுமார் 78க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணையில் நீர்பிடிப்பு பரப்பில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும்,  அணையின் நீர்பிடிப்பு பகுதி மண்ணால் தூர்ந்து போய் உள்ளதாலும் அதிகளவு நீரை மழைகாலத்தில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தபோதிலும் மிக குறைந்த அளவு நீரை மட்டுமே சேமித்து வைக்க முடிகிறது. இதனால் ஒருபோக விளைச்சலுக்கு மட்டுமே பயன்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவநிலை மாற்றம் காரணமாக கல்வராயன்மலையில் விட்டு விட்டு  மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம்  கடந்த மாத துவக்கத்தில் 36 அடியாக இருந்தது. மேலும் தொடர்ந்து மலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 42.4 அடியாக உயர்ந்துள்ளது.  கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடி என்பதால்  இன்னும் அணை நிரம்ப 3.6 அடி மட்டுமே உள்ளது.  கோமுகி அணை முன்கூட்டியே நிரம்பி வருவதால் பருவமழையின்போது அடிக்கடி அணை திறக்கவும்,  அதனால் கோமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.  அணை நிரம்பியதால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Gomukhi Dam , Komuki dam filled before monsoon: Irrigated farmers happy
× RELATED மழைநீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்...