×

மழைநீர் வீணாக கடலில் கலக்கும் அவலம் மண்மேடாக மாறிய கோமுகி அணை-தூர்வார ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

சின்னசேலம் : மண்மேடாக உள்ள கோமுகி அணையை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கலெக்டருக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் உள்ள  கல்வராயன்மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின்மூலம் 5,865 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. இந்த கோமுகி அணையின்மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர். கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது.  கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால்  சம்பா பருவத்துடன் சேர்த்து 3 போகமும் நெல் அறுவடை செய்தனர்.

ஆனால் அதன்பிறகு கால மாற்றத்தால் பருவமழை பொய்த்து போனது. பெயரளவிலேயே மழை பெய்தது. மேலும் மழைகாலத்தில் மலையில் இருந்து நீர்வரத்து இருக்கும்போது நீரின் வேகத்தில் மண், மணல், சிறு, சிறு கற்களும் அடித்து வரப்பட்டு அணையில் நீர்பிடிப்பு வளாகத்தில் படிந்து வந்தது. அணை கட்டப்பட்டு 50 ஆண்டு காலமானதால் மண் அடித்து வரப்பட்டு நீர்பிடிப்பு பகுதி முழுவதும் மண்மேடாகி விட்டது. இதனால் 46 அடி உள்ள கோமுகி  அணை மண்மேடாகி போனதால்  மழை காலத்தில் குறைந்த அளவு நீரை மட்டுமே அணையில் சேமிக்க முடிகிறது.
இந்த நீரை கொண்டு ஒரு பருவம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது. சில நேரங்களில் ஒரு பருவத்திற்கே போதுமான நீர் இல்லாமல் நெற்கதிர் வந்த நிலையில் பயிர்கள் காய்ந்து போனதும் உண்டு.

கோமுகி அணை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அதனால் மண்மேடாகி போன கோமுகி அணையை தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கோமுகி அணையை தூர் அள்ளாததால் மழைகாலத்தில் அளவுக்கும் அதிகமான தண்ணீர் அணையில் இருந்து வெளியேறி, ஆற்றின் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தென் மாவட்டங்களில் உள்ள சில அணைகள் தூர் அள்ளப்பட்டது. ஆனால் அப்போது கோமுகி அணையை ஆளும் கட்சியினர் கண்டுகொள்ளவில்லை.
தற்போது கோமுகி அணை வறண்டு குட்டை போல காணப்படுகிறது. ஆகையால்  கோமுகி அணையை ஆழப்படுத்த இது சரியான நேரமாகும். ஆகையால் விவசாயிகள் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் மராமத்து பணியை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அணையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மேற்கு பகுதியில் கரை அமைக்க வேண்டும். வண்டல் மண்னை விவசாயிகள் இலவசமாக அள்ளிச்செல்லவும் இரவில் நடக்கும் மணல் திருட்டை தடுக்கவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Collector ,Gomukhi Dam , Chinnasalem: Farmers of Kallakurichi district request the Collector to take action against the Gomuki dam in Manmeda.
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...