×

கோயில் திருவிழாவில் தாக்கியதால் முன்விரோதம் சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாளில் ரவுடி வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது

சென்னை: கோயில் திருவிழாவில் தன்னை வெட்டிய வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை, ஆட்ேடா டிரைவர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் குமார் (எ) குள்ள குமார் (21). இவர், நுங்கம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. பிரபல ரவுடியான குள்ள குமார் 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. குமார் நேற்று முன்தினம் மாலை நுங்கம்பாக்கம் ேடங்க் பன்ட் ரோட்டிலுள்ள ஒரு கடை வாசலில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஆட்டோவில் வந்த 3 பேர் ரவுடி குமாரிடம் வீண் தகராறு செய்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரவுடி குமாரின் சகோதரன் தாமோதரன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனசேகர் (எ) சாம்பார் (26), அதே பகுதியை சேர்ந்த ராஜா (33), ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்த பார்த்திபன் (30) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவுடி குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். அதைதொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி நேற்று ஆட்டோ டிரைவர் தனசேகர், அவரது நண்பர்களான ராஜா, பார்த்திபனை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கொலைக்கான காரணம் குறித்து கைதான ஆட்டோ டிரைவர் தனசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த மே மாதம் புஷ்பா நகரில் நடந்த கோயில் திருவிழாவில், ரவுடி குள்ள குமாருக்கும் தனசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரவுடி குமார் தனசேகரனை கத்தியால் வெட்டி உள்ளார். இது குறித்து தனசேகர் அளித்த புகாரின்படி நுங்கம்பாக்கம் போலீசார் ரவுடி குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிறகு சிறையில் இருந்து குமார் ஜாமீனில் வெளியே வந்த தகவல் ஆட்டோ டிரைவர் தனசேகருக்கு தெரியவந்தது. இதனால் தன்னை வெட்டிய குமாரை கொலை செய்ய முடிவு செய்து, தனது நண்பர்களுடன் இணைந்து வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags : Rowdy , Temple festival, rowdy hacked to death, auto driver arrested
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...