×

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்: எஸ்சி, எஸ்டி மாநில ஆணையம் உத்தரவு

சென்னை: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவித்தொகையை  உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை 30 பேருக்கு மொத்தம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் வழங்கக் கோரி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து 17 முன்மொழிவுகள் பரிந்துரை செய்து வரப்பெற்றுள்ளன.

அதில், 17வது பெயராக மாதையன் வாரிசுகள் எட்டு பேர் என்ற பெயருக்கு முன்னால், முன்மொழிவு வரப்பெற்ற தேதி மே 20ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மே 16ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில் மே 20ம் தேதி முன்மொழியப்பட்ட பெயர் எப்படி இடம்பெற முடியும் என்பது விளங்கவில்லை. இது, இந்த அறிக்கையின் நம்பகமற்ற தன்மையை வெளிப்படுத்திருகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டு தொகையை உடனே தராமல், சட்டத்தின் விதிமுறைகள் புறந்தள்ளப்படுவதை ஏற்க முடியாது.

ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு எழுதப்பட்டுள்ள கடந்த மே 16ம் தேதியிட்ட கடிதத்தில்கூட மே 20ம் தேதிக்கு பிறகு எதிர்பார்க்கப்படும் வழக்குகளுக்கான உதவித் தொகை கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தின் ஆணையருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உதவித் தொகை வழங்கப்படாமல்  நிலுவையில் இருக்கும் வழக்குகளில் மட்டுமின்றி, 2022-23 நிதி ஆண்டுக்கான எதிர்நோக்கு உதவி நிதியையும் எவ்வித தாமதமும் இன்றி ஆதிதிராவிடர் நல ஆணையரகம் உடனடியாக வழங்க வேண்டும்.

Tags : SC ,ST , Relief should be provided immediately to victims of violence: SC, ST state commission orders
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...