×

ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி தலைவர்கள் மட்டுமே தேசிய கொடி ஏற்ற வேண்டும்; கலெக்டர் ராகுல்நாத் உத்தரவு

செங்கல்பட்டு: ஊராட்சி மன்ற அலுவலகங்களில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அன்று ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும். வேறு எவரேனும் தேசிய கொடி ஏற்றி குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்  ராகுல்நாத் எச்சரித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர்  ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின திருநாள் அமுதபெருவிழாவை யொட்டி மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடியினை பறக்கவிட வேண்டும்.

மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றதலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்தவேண்டும்.  அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசியகொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் தேசியக்கொடியை ஏற்றுவது தொடர்பாக பிரச்னை இருந்தால் மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி எண் 9445456000 மற்றும்  ஊராட்சிகள் உதவிஇயக்குநர் தொலைபேசி எண்  9384844531 ஆகிய  தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். மேலும், தேசியக்கொடியினை அவமதிப்பு செய்பவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : panchayat ,Collector ,Rahulnath , Only panchayat leaders should hoist the national flag in panchayat council offices; Collector Rahul Nath order
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு