×

திருவொற்றியூர், மணலியில் உள்ள ஆதரவற்றோர் விடுதிகளில் மேயர் ஆய்வு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மணலியில் உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதிகளை மேயர் பிரியா ஆய்வு  செய்து, முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட விம்கோ நகரில் பெண்கள் ஆதரவற்றோர் தங்கும் விடுதியும், திருநகரில் ஆண்கள் ஆதரவற்றோர் தங்கும் விடுதியும் உள்ளன. சென்னை மாநகராட்சி மேற்பார்வையில் தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வரும் இந்த விடுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற வசதி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விம்கோ நகர், திருநகரில் உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று முன்தினம் இரவு திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது, விடுதியில் தங்கியுள்ள முதியவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர், முதியவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவம் போன்றவை தரமாகவும், முழுமையாகவும் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். தொடர்ந்து, மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ 3வது பிரதான சாலையில் உள்ள ஆண்கள் ஆதரவற்றோர் தங்கும் விடுதியை மேயர் பிரியா ஆய்வு செய்தார். அங்குள்ள முதியவர்களிடமும் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் முறையாக அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். ஆய்வின்போது, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர்கள் கே.பி.சொக்கலிங்கம், காசிநாதன், ராஜேந்திரன், நந்தினி, தீர்த்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Thiruvotiyur, Manali , Mayoral survey of destitute hostels in Thiruvotiyur, Manali
× RELATED திருவொற்றியூர், மணலியில் உள்ள ஆதரவற்றோர் விடுதிகளில் மேயர் ஆய்வு