×

தாமிரபரணி ஆற்றங்கரையில் பராமரிப்பு இன்றி சேதமடையும் கல்மண்டபங்கள்: புதுப்பொலிவு பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: தாமிரபரணி ஆற்றங்கரைகளில் பராமரிப்பு இன்றி சேதமடைந்த கல்மண்டபங்களை ஒன்றிய அரசின் சீர்மிகு திட்டத்தில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பொதிகை மலையில் பூங்குளத்தில் தோன்றி 180 கிமீ தூரம் பாயந்தோடி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி நதிகரையின் ஓரங்களில் சைவம், வைணவம் தலைத்தோங்கி வளர்ந்துள்ளது. இந்நதிக்கரையில் நவதிருப்பதி, நவகயிலாய சிவன், பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. தாமிரபரணி கரைகளில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களை செய்யும் வகையில் நமது முன்னோர்கள் கல் மண்டபங்களை அமைத்துள்ளனர். இந்த மண்டபங்கள் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது தண்ணீரின் போக்கை திசைகாட்டவும், வெள்ளத்தின் அளவை குறிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சங்கு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
தாமிரபரணி நதிக்கரையில் கண்கெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால பொருட்கள் தமிழர் நாகரீகத்தின் முன்னோடி தாமிரபரணி நாகரீகம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. நெல்லை, தூத்துக்குடியில் 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இத்தகைய சிறப்புக்களை உடைய தாமிரபரணியில் பல்வேறு மன்னர்களால் எழுப்பப்பட்ட சுமார் நூறுக்கும் மேற்பட்ட கல் மண்டபங்கள் உள்ளன.

இந்த கல் மண்டங்களில் பழங்காலத்து கல்சிற்பங்கள், சுவாமி சிலைகள் உள்ளிட்டவைகள் பழமைமாறாமல் அப்படியே உள்ளன. இவைகளை போற்றி பாதுகாக்க வேண்டிய நாம் கண்டும் காணாமல் விடப்பட்டதால் கல் மண்டபங்கள் தற்போது போதை ஆசாமிகளின் புகலிடமாகவும், விரும்பதகாத சம்பவங்களை அரங்கேற்றம் செய்யும் தளாகவும் மாறிவருகிறது. இத்தகைய கல் மண்டங்களில் ஒரு காலத்தில் ஆற்றில் குளிக்க வரும் பெண்கள் உடைகள் மாற்றுவதற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது பழமையும் பெருமையும் வாய்ந்த கல் மண்டங்கள் பல இடங்களில் கழிவறைகளாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகம் எதிரில் சிந்துப்பூந்துறை தைப்பூச மண்டபத்தின் அருகில் அமைந்துள்ள கல் மண்டபங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த தாமிரபரணி புஷ்கரணி வைபவத்தின் போது ஆற்றங்கரை கல் மண்டபங்கள் பராமரிக்கப்பட்டு புஷ்கரணி வைபவம் நடந்தது. தற்போது அவைகள் சிதிலம் அடைந்தும், விரும்பதகாத நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

கைலாசபுரத்தில் அழகிய வெங்கடாஜலபதி சிலையுடன் காணப்படும் கல் மண்டபம் தற்போது அலங்கோலமாக காட்சியளிப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர். நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகரத்தில் பல்வேறு கட்டிடங்கள் புதுபொலிவுடன் காணப்படுகிறது. அதுபோல் தாமிரபரணி நதிக்கரை கல்மண்டபங்களையும் பழமை மாறால் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் தை, ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாடு சிறப்புடையதாகும். இதற்காக தாமிரபரணி நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கல் மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகளை செய்வது வழக்கம். ஆனால் கல் மண்டபங்கள் சிதிலமடைந்து காணப்படுவதால் முன்னோர்கள் வழிபாடு தாமிபரணி நதிக்கரையில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி நதியை தூய்மைபடுத்தும் திட்டத்தில் கல் மண்டபங்களையும் சீரமைத்து புதுபொலிவு பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Tamiraparani River , On the bank of Tamiparapharani river Deteriorating Stone Halls Without Maintenance: Revival? Public expectations
× RELATED தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க சுவர் கட்டும் பணி நிறைவு