சென்னை: காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு ‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் ரூ.378 கோடியே 52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். சென்னையில், கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.186 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1,036 காவலர் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார். மேலும், உள்துறை சார்பில் ரூ.36 கோடியே 52 லட்சம் செலவில் காவல், சிறைத்துறை, தீயணைப்பு துறையினருக்கு வீடு, அலுவலகங்களை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.55 கோடியே 19 லட்சம் செலவில் ‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
சென்னை, புதுப்பேட்டைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.100 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார். சென்னை மணலியில் ரூ.13 கோடியே 75 லட்சம் செலவில் கட்டியதீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள் திறந்தார்.‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் சிவகங்கை வட்டம் பையூர் பிள்ளைவயல், சேலம், விழுப்புரம் மாவட்டம் ஆகிய இடங்களில் ரூ.55 கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் என மொத்தம் 378 கோடியே 52 லட்சம் செலவில் கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.3 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விசுவநாதன் வழங்கினார்.