இலங்கை துறைமுகத்துக்கு உளவு கப்பல் அனுப்புவதை ஒத்திவையுங்கள்: சீனாவுக்கு இலங்கை அரசு திடீர் கோரிக்கை..!!

கொழும்பு: சீனாவின் உளவு கப்பல் அம்பன் தோட்டா துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது சீனாவின் யுவான் வாங் உளவு கப்பல். 400 பணியாளர்களை கொண்ட இந்த கப்பலில் செயற்கை கோள்கள், ஏவுகணைகளை கண்காணிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன. இந்த கப்பலானது இலங்கையின்  அம்பன் தோட்டா துறைமுகத்தில் ஒருவாரம் முகாமிடுவதற்காக சீனாவில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 11ல் அம்பன் தோட்டா துறைமுகத்தை கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சீனாவின் உளவு கப்பல் வருகையை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களை அனுமதிக்கக்கூடாது என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் உளவு கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது. கப்பலை அம்பன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை ஒத்திவைக்கும் கோரிக்கை அடங்கிய கடிதம் முறைப்படி சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கும், இலங்கை அரசிடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: