×

கணவருடன் தகராறில் விபரீதம்; பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: சேலம் அருகே சோகம்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் அடுத்த எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சபரி (33). இவர் கொங்கணாபுரத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரளா (28). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 7 வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளான்.

இதனிடையே மீண்டும் கர்ப்பம் அடைந்த சரளா, பிரசவத்திற்காக தாய் வீடான பாலாப்பட்டிக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தொடர்ந்து அவர் தாய் வீட்டில் இருந்து வந்தார். மகன் சர்வேஷ் தந்தை சபரியுடன் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறான். சபரி அடிக்கடி மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தைகள் மற்றும் மனைவியை பார்த்து வந்தார். இதேபோல் நேற்று இரவு பாலாப்பட்டிக்கு சென்றிருந்தார். இங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் சபரி வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே இன்று அதிகாலை 3 மணி அளவில் சரளா எழுந்து தந்தை நல்லமுத்துவுக்கு டீ வைத்துக்கொடுத்துள்ளார். பின்னர் தந்தை தூங்கச்சென்றுவிட்டார். தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் நல்லமுத்து எழுந்து பார்த்தபோது சரளாவையும் 2 குழந்தைகளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தனர். வீட்டின் அருகே உள்ள வெங்கடேஷ் என்பவரின் தோட்டத்து கிணற்றுக்கு சென்று பார்த்தபோது சரளா நீரில் மிதந்து கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரின் அண்ணன் கோகுல்ராஜ் கிணற்றில் குதித்து சரளாவை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மேலே கொண்டு வந்தார். தொடர்ந்து அவரை இடைப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுபற்றி கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சரளாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவருடன் தகராறில் சரளா அவரின் இரட்டை பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் குதித்து தற்கொலை செய்துகொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இடைப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி குழந்தைகளின் உடல்களை தேடி வருகின்றனர். மேலும் இதுபற்றி கொங்கணாபுரம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Pachilam ,Salem , Misfortune in dispute with husband; Pacchilam mother commits suicide by throwing twin girls into a well: Tragedy near Salem
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...