சென்னை: அல்-கொய்தா தலைவன் அல் ஜவாஹிரி ஏவுகணை வீசி கொலை செய்யப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்திற்கு கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நுழைவு வாயில் முன்பு 2 வஜ்ரா வாகனத்தை நிறுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானை தாலிபான் இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த 1ம் தேதி இரவு அமெரிக்க படைகள் திடீரென ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அல்-கொய்தா இயக்க தலைவன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டான்.
இதனால் அல்-கொய்தா இயக்கம் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அந்நாட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அல் -கொய்தா இயக்கம் மற்றும் அதன் ஆதராவாளர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு வழக்கத்திற்கு மாறாக உதவி கமிஷனர் தலைமையில் நேற்று அதிகாலை முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தூதரகம் முன்பு 2 வஜ்ரா வாகனங்க நிறுத்தப்பட்டு 50 ஆயுதப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூதரகம் அருகே உள்ள அண்ணா மேம்பாலத்தின் மீதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றும் நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து அப்பகுதியில் தீவிர வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.