×

தமிழகத்தில் உள்ள கொதிகலன்கள் அனைத்தும் சோதனை செய்யப்படும் முறை குறித்து பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..!!

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள கொதிகலன்கள் அனைத்தும் சோதனை செய்யப்படும் முறை குறித்து பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறையின் கீழ், கொதிகலன்கள் இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் கொதிகலன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கொதிகலன்களை ஒவ்வொரு ஆண்டும் சோதனை செய்து, அதன் செயல்திறன் குறித்து, கொதிகலன்கள் இயக்குநரகத்தால், சான்றளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளிலுள்ள கொதிகலன்கள் சோதனை செய்யப்படும் விதம் ஆகியவற்றை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கொதிகலன்கள் சட்டம் 1923ன்படி, கொதிகலன்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவதற்கும், பணி செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும். மத்திய கொதிகலன்கள் வாரியத்தால், அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வு நிறுவனங்கள், கொதிகலன்களை வடிவமைத்து, உற்பத்தி செய்யப்படுகின்றன.  இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கொதிகலன்களின் தரச்சோதனை செய்து அவற்றை தொழிற்சாலைகள் பயன்படுத்த கொதிகலன்கள் இயக்குநரகம் ஒவ்வொரு ஆண்டும் சான்றளிக்கிறது. கொதிகலன்களில், அதிக ஆபத்துள்ள கொதிகலன்கள், குறைந்த ஆபத்துள்ள கொதிகலன்கள் மற்றும் நடுத்தர நிலையில் ஆபத்துள்ள கொதிகலன்கள்  என்று மூன்று வகையாக கொதிகலன்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்றாற்போல், அதிக கவனம் செலுத்தவும், அடிக்கடி சோதனை செய்தும், கொதிகலன்களுக்கு சான்றளிக்கப்படுகிறது.  

தமிழ்நாட்டிலுள்ள 5,605 கொதிகலன்களும், ஒவ்வொரு ஆண்டும் கொதிகலன்கள் இயக்குநர் அவர்களால், சோதனை செய்யப்படுகிறது. கொதிகலன்கள் தொழிற்சாலைகளுக்கு அவசியமானது.  எனவே, ஒவ்வொரு துணை இயக்குநர்களும் அதிகமான கவனம் செலுத்தி, கொதிகலன்கள் பாதுகாப்பாக இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.  கொதிகலன்கள் உற்பத்தி நிலையில், அதிக கவனம் செலுத்தி அவற்றின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். கொதிகலன்கள் பயன்படுத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் கொதிகாலன் இயக்குபவருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

கொதிகலன்கள் சோதனையில், கொதிகலன் இயக்குநரகம் அதிக கவனம் செலுத்தி, தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி இயங்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், உற்பத்தி திறன் அதிகரிக்கவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படவும், கொதிகலன்கள் இயக்குநரகம்  ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், கொதிகலன் இயக்குநர்  சு.கணேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags : Works ,Minister ,A.V. Velu ,Tamil Nadu , Tamil Nadu, Boilers, Testing, Minister AV Velu, Study
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிக்கு...