×

ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் ரூ. 194.29 கோடி வடிகால் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு; செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ரூ. 194.29 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.
  ராயபுரம் மண்டலம் ரிப்பன் மாளிகை வளாகம், பெரியமேடு, வேப்பேரி ஆகிய பகுதிகளில் ரூ. 24.96 கோடி மதிப்பீட்டில் 2,366 மீ. நீளத்திற்கு நடைபெறும்  மழைநீர் வடிகால் பணிகளையும், என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் பிரகாசம் சாலை சந்திப்பில் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் 14 மீ.நீளத்தில் நடைபெற்று வரும் பணியையும் ஆய்வு செய்தார்.

அப்போது, ரயில்வே துறை இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும், தேவையான போது ரயில்வே துறை அலுவலர்களுடன் இதுதொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இதேபோன்று, திரு.வி.க.நகர் மண்டலம், தேனாம்பேட்டை மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு  செய்தார். இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார். தொடர்ந்து, சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் ரூ. 83.58 கோடி மதிப்பீட்டில் மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாருதல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த இடங்களில் நடைபெறும் பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அதாவது செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், ராயபுரம் மண்டலம் வடக்கு கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கழிப்பறையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.  இந்த ஆய்வின்போது, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் பரந்தாமன், தாயகம் கவி, நா.எழிலன், ஜெ.கருணாநிதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, துணை ஆணையர் எம்.எஸ்.பிரசாந்த், வட்டார துணை ஆணையாளர்கள் எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மண்டல குழு தலைவர்கள் ஸ்ரீராமுலு, சரிதா மகேஷ்குமார், எஸ்.மதன்மோகன், எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Rayapuram ,Thiru.V.K.Nagar ,Thenampet ,Minister ,KN Nehru , In Rayapuram, Thiru.V.K.Nagar, Thenampet mandals Rs. 194.29 Crore Drainage Work by Minister KN Nehru; Ordered to be completed by the end of September
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது