×

விழாக்கோலம் பூண்டது திருத்தணி ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்; அலகு குத்தியும் காவடி சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்

திருத்தணி:  திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அலகு குத்தியும் காவடிகள் சுமந்துவந்தும் நேர்த்திகடன் செலுத்தினர். ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஆடிப்பூரம் நடைபெற்றது. இதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கார், வேன் மற்றும் பைக்குகளில் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு செல்ல முயன்றனர். இதன்காரணமாக அதிக வாகனங்கள் மலைப்பாதையில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.

இவ்வாறு கோயிலுக்கு வந்த பக்தர்கள், பால், பன்னீர் மற்றும் புஷ்ப காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என பல தரப்பினரும் அலகு குத்தியும் கன்னத்தில் வேல் குத்தியும் பக்தி சிரத்தையுடன் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். காவடிகளிலும் பக்தர்கள் செல்லும்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை முழங்கினர். பைக்குகளிலும் ஏராளமான பக்தர்கள் காவடிகள் கொண்டுவந்து முருகருக்கு சமர்ப்பித்தனர். சாலை மார்க்கமாக நடந்து வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர், மோர், குளிர்பானம் வழங்கப்பட்டது. சில பகுதிகளில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags : Murugan temple ,Bundadu Tiruthani Adipuram ceremony , Devotees thronged the Murugan temple for the celebration of the Thiruthani Aadipuram festival; Unit stabbing and carrying kavadi were performed with finesse
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்று பாதை திட்டம்: அதிகாரிகள் ஆய்வு