×

175 சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 5725 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு; தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 175 சிறப்பு பள்ளிகளில் காலை வந்து மாலை வீடு திரும்பும் 5725 மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் 193 தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 6006 குழந்தைகளுக்கு இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ15,36,300 நிர்வாக ஒப்புதலும், 2023-2024ம் நிதியாண்டிற்கு 4 மாதங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினத்தொகை ரூ9 லட்சத்து 300 நிதி ஒப்பளிப்பு செய்து கீழ்காணும் வழிமுறைகளின்படி இத்திட்டத்தினை விரிவுபடுத்தி செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

l சிறப்பு பள்ளிகளில் கல்வி பயிலும் காலை வந்து மாலை வீடு திரும்பும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் இணைத்து சத்துணவு பயனாளிகளின் எண்ணிக்கையினை நிர்ணயம் செய்யப்படும். lசத்துணவு திட்டத்தில் இணைக்கப்பட்ட திருத்திய எண்ணிக்கையை பொறுத்தே, சத்துணவு சமைப்பதற்கான தேவைப்பட்டியல்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தயார் செய்திட வேண்டும்.lஅரசு பள்ளிகளில் இருந்து சூடாக சமைத்த உணவை எடுத்து செல்வதற்கான பாத்திரங்கள் மற்றும் போக்குவரத்திற்கான செலவினத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினால் ஏற்கப்படும்.

lஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 2485 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இணை உணவாக சத்துமாவு, மதிய உணவுடன் வாரத்திற்கு 3 முட்டைகள் மற்றும் நாளொன்றுக்கு 60 கிராம் வீதம் செறியூட்டப்பட்ட பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் அருகில் உள்ள குழந்தை மையங்களின் மூலம் வழங்க இயலும். lசிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையுடன் இணைத்து பயனாளிகளின் எண்ணிக்கையை மறு நிர்ணயம் செய்து வருகிற ஜூன் மாதம் முதல் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கிட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாணையின்படி, தமிழகம் முழுவதும் உள்ள 175 சிறப்பு பள்ளிகளில் காலை வந்து மாலை வீடு திரும்பும் 5725 மாணவர்களுக்கு மதிய உணவினை அரசு பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post 175 சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 5725 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு; தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Govt ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Director of ,Disabled ,Persons ,
× RELATED இசைக்கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள...