×

தேர்தல் செலவு பணத்தை வாரி சுருட்டிய விவகாரம் பற்றி பேச அண்ணாமலை தடை: நிர்வாகிகள் கடும் ஏமாற்றம்

சென்னை: தேர்தல் பணத் தகராறு குறித்து எந்த கருத்தையும் கூட்டத்தில் பேசக்கூடாது என்று அண்ணாமலை முன் கூட்டியே கூறியதால், நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், தமிழக பாஜ நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் பாஜ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜ வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக, மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு, மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் தேர்தல் செலவுகள், பணிகள் தொடர்பாக அண்ணாமலையிடம் புகார் செய்ய நிர்வாகிகள், வேட்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். தமிழகத்தில் பாஜ 19 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜ கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன் ஆகியோர் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். மொத்தம் 23 தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் செலவுக்கு பெரிய அளவில் அந்தந்த தொகுதி நிர்வாகிகளுக்கு பணம் வழங்கபட்டதாக கூறப்படுகிறது. தொகுதி மற்றும் எதிர் வேட்பாளர்கள், தங்களுடைய கட்சி வேட்பாளர்களுக்கு ஏற்ற வகையில் மேலிடத்தில் இருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றுக் கொண்ட நிர்வாகிகள் பலர் முறையாக அந்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே வாரிச் சுருட்டிக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜவினரே கட்சி தலைமையிடம் புகார் அளித்த சம்பவங்களும் நடைபெற்றது. பாஜவில் பெரும்பாலும் ரவுடிகள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், தவறான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று பலரும் பொறுப்பில் உள்ளனர். இதனால் பணத்தை கேட்ட இடங்களில் எல்லாம் தகராறு, அடிதடி வெட்டுக் குத்து என்று பல்வேறு சம்பவங்கள் நடந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்ட கட்சியினருக்கு மேலிடத்தில் பணம் வாங்கிய நிர்வாகிகள் பணம் தரவில்லை என்றும், அதற்காக அவர்கள் பல இடங்களில் வாய்தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்ட சம்பவங்களும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. சில மாவட்டங்களில் பணம் சுருட்டியதாக சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டி அம்பலப்படுத்திய சம்பவங்கள் தமிழக பாஜ தலைமைக்கு அவமானத்தை ஏற்படுத்தி தந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி தேர்தலில் பணம் வினியோக பிரச்னை தொடர்பாக பாஜ தலைமைக்கு தொடர்ந்து புகார் மேல் புகார் வந்தது. தேர்தல் ரிசல்ட் வருவதற்குள் இப்படிப்பட்ட புகார்கள் தொடர்ந்து வந்தது, கட்சி தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் சென்னையில் தமிழக பாஜ நிர்வாகிகள் கூட்டம் நடந்ததால், பணத்தை சுருட்டிய நிர்வாகிகள் மீது புகார் செய்ய பலரும் ஆதாரத்துடன் காத்திருந்தனர்.

ஆனால் கூட்டம் தொடங்கியதும், பணம் சுருட்டல், கட்சி மோதல் குறித்து யாரும் பேசக் கூடாது என்று முன் கூட்டியே அண்ணாமலை கண்டித்து விட்டார். வாக்கு எண்ணிக்கை குறித்து மட்டுமே பேச வேண்டும் என்று கூறிவிட்டார். இதனால் ஆதாரத்துடன் புகார் கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கூட்டம் முடிந்ததும் விரக்தியில் புறப்பட்டுச் சென்றனர். கட்சி அலுவலகத்துக்கு அண்ணாமலை வந்து புகாரை வாங்குவதில்லை. கூட்டம் நடத்தினாலாவது சொல்லலாம் என்று வந்தால், அதற்கும் தடை போட்டு விட்டார் என்று அவர்கள் புலம்பியபடியே சென்றனர்.

* தேர்தல் செலவுக்கு பாஜ பெரிய அளவில் தொகுதி நிர்வாகிகளுக்கு பணம் வழங்கியது. இந்த பணத்தை பெற்றுக் கொண்ட நிர்வாகிகள் பலர் முறையாக செலவு செய்யாமல் அப்படியே வாரிச் சுருட்டிக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

The post தேர்தல் செலவு பணத்தை வாரி சுருட்டிய விவகாரம் பற்றி பேச அண்ணாமலை தடை: நிர்வாகிகள் கடும் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்...