திருவள்ளூரில் வளர்ச்சி திட்ட பணிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் எம்.பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீ.காந்திமதிநாதன், இரா.வெங்கடேசன், மேலாளர் ஸ்ரீராம் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், வேலு, சாந்தி தரணி, விமலா குமார், வ.ஹரி, திலீப்ராஜ், சரத்பாபு, வேதவள்ளி சதீஷ், நவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், மழைக் காலம் தொடங்க உள்ளதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே வீடு, வீடாக சென்று சுகாதார துறை மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாவதால் மழை நீர் தேங்காதவாறு கால்வாய்கள் அமைத்து சீரமைக்க வேண்டும்.

மழை காலம் காரணமாக இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகளை கண்டறிந்து, அதை புதுப்பிக்கவும், புதிய கட்டிடம் கட்டவும் தமிழக அரசிடமிருந்து நிதியை பெற முயற்சி செய்யப்படும் என்றார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மற்றும் திட்ட பணிகள் மூலம் நடைபெற்று வரும் சாலை பணிகள், குடிநீர் திட்டப் பணிகள், கட்டிடப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்கவும், மேலும் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் பகுதிகளிலும் தேவையான வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய கவுன்சிலர் த.எத்திராஜ், கீழானூர் கிராமத்தில் மும்முனை மின்சாரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் காக்களூர் பகுதியிலும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல் காக்களூரில் நூலகம் அமைக்க தமிழக பால்வளத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் மீதமுள்ள ரூ. 20 லட்சத்தை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: