வாகனத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பலி: மேற்குவங்கத்தில் நள்ளிரவு சோகம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பிக்கப் வாகனத்தின் ஜெனரேட்டரில் இருந்து மின்சாரம் கசிவு ஏற்பட்டதால், அந்த வாகனத்தில் சென்ற 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டம் தார்லா பாலம் வழியாக நேற்றிரவு ஜல்பேஷ் நோக்கி ‘பிக்கப்’ வாகனம் சென்றது. இதில் 27 பேர் பயணம் சென்றனர்.  இந்த வாகனத்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜே சிஸ்டத்தின் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மின்சாரம் தாக்கியதில் வாகனத்தில் இருந்த 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மாதபங்கா கூடுதல் எஸ்பி அமித் வர்மா கூறுகையில், ‘வாகனத்தில் இருந்த ஜெனரேட்டரின் வயரிங் துண்டிப்பு காரணமாக பெஹார் பகுதியில் விபத்து நடந்துள்ளது. மின்கசிவு ஏற்பட்டவுடன் வாகனம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

வாகனத்தில் மொத்தம் 27 பேர் இருந்தனர்; அவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும் 16 பேருக்கும் மின்சாரம் தாக்கியதின் பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஜல்பைகுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் பயணம் செய்தவர்கள் சிட்டல்குச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து வாகனத்தின் ஓட்டுனர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறோம். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது’ என்றார். மின்சாரம் தாக்கி 10 பேர் பலியான சம்பவத்திற்கு, முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: