×

கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ யானை கரோலில் அடைப்பு

* சிகிச்சை அளிக்கும் பணி தீவிரம்ஊட்டி : உடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடலூரில் நேற்று முன்தினம் பிடிக்கப்பட்ட ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ காட்டு யானை அபயரண்யம் முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் பிற காட்டு யானைகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக வால் பகுதியில் பெரிய காயத்துடன் அவதிப்பட்டு வந்த ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ என்று அழைக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை நேற்று முன்தினம் ஈப்பங்காடு பகுதியில் மயக்க ஊசி செலுத்தாமல் கும்கிகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை கும்கிகள் உதவியுடன் லாரியில் யானை ஏற்றப்பட்டு முதுமலை, அபயரண்யம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. வசீம், விஜய், வில்சன், உதயன், பொம்மன் உள்ளிட்ட 6 கும்கிகள் உதவியுடன் லாரியில் இருந்து இறக்கப்பட்ட ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ யானை புதிதாக அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டுக்குள் (கரோல்) அடைக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் காயத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. யானையின் பின்பகுதியில் ஆழமான காயம் உள்ளது. குணமடைய 4 முதல் 6 மாதம் வரை ஆகும். தொடர் சிகிச்சை அவசியம் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல் கூறுகையில், ‘‘கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட யானை, முதுமலை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. முதல்முறையாக மயக்க ஊசி செலுத்தாமல் காட்டு யானை ஒன்று பிடிக்கப்பட்டு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழக மருத்துவ குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமாரன், விஜயராகவன், ராஜேஷ் உள்ளிட்டோரும் அதன் உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர்’’ என்றார்….

The post கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ யானை கரோலில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Karol ,carol ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை